குவைத் நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் இரண்டு தமிழர்களும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள இரங்கலில், குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: இந்தியாவிற்குள்: +91 1800 309 3793, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.