கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில் கலந்து கொண்ட எட்டாம் வகுப்பு மாணவி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் சிவராமன், 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்ததாக பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மொத்தம் 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைதாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கைதுக்கு பயந்து, அவர் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனால் சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.
பாலியல் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி உயிரிழந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை அடுத்தகட்டத்திற்கு எப்படி செல்லும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும், சிவராமனின் தந்தையும் நேற்று மாலை சாலை விபத்தில் உயிரிழந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.