இரு நாள்களுக்கு முன்னர் சென்னையில் நடிகை கஸ்தூரி சர்ச்சைக்கு உரியவகையில் பேசியது பெரும் பிரச்னை ஆனது. குறிப்பாக, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள தெலுங்கர்கள் தரப்பில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து நேற்று கஸ்தூரி சென்னை, போயஸ்தோட்டப் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் ஊடகத்தினருக்கு விளக்கம் அளித்தார்.
ஆனாலும் அவர் கொட்டிய வார்த்தைகளுக்காக பல தரப்பினரும் சமூக ஊடகங்களில் வன்மையாகக் கண்டனங்களை எழுப்பிவருகின்றனர். தொலைக்காட்சி ஊடகங்களிலும் கடுமையாக விவாதிக்கப்பட்டது.
இன்று தி.மு.க.வின் சார்பில் அதன் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், கஸ்தூரி இன்று மாலையில் மீண்டும் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார். தன் எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில தனிநபர்கள் மீதுதான் தான் கருத்துக்கூறியதாகவும் ஒட்டுமொத்த தெலுங்கர்களைப் பற்றியும் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
”கடந்த இரண்டு நாள்களாக எனக்கு பல அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் வந்துள்ளன. அவர்கள் என்னுடைய நிலைப்பாட்டை இன்னும் திடமாக்கிவிட்டார்கள். இருப்பினும், மிகவும் மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர் இன்று என்னுடன் பேசி, தமிழ்நாட்டிலும் இதற்கு அப்பாலும் உள்ள ஒட்டுமொத்த தெலுங்கு மக்கள் மீதும் நான் குறிப்பிட்ட வார்த்தைகளின் விளைவைப் பற்றி பொறுமையாக விளக்கினார்.
நான் பாரத மாதாவின் ஒற்றுமை, பன்முகத் தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி.
எப்போதும் சாதி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள்.
தெலுங்குடன் எனக்கு சிறப்பான தொடர்பு இருப்பது ஒரு அதிர்ஷ்டம். நாயக்க மன்னர்கள், கட்டபொம்மு நாயக்கர், தியாகராஜ கீர்த்தனைகள் பாடிய காலத்தை ரசித்து வளர்ந்தவள் நான்.
தெலுங்கில் என் திரையுலக வாழ்க்கையை மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்புடன் குடும்பத்தையும் கொடுத்துள்ளனர்.
நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்கள் பற்றி சூழல் சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்தைப் பற்றிய பொதுவான கருத்துகள் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
தெலுங்கு மக்களைப் புண்படுத்துவதோ தாக்குவதோ எனது நோக்கம் இல்லை.
தற்செயலாக மனம் புண்படும்படி நான் பேசியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
நட்புணர்வுநோக்கில், 3 நவம்பர் 2024 அன்று தெலுங்கு தொடர்பாக நான் குறிப்பிட்ட எல்லாவற்றையும் திரும்பப்பெறுகிறேன்.
இந்த சர்ச்சையால் நான் எழுப்பிய முக்கியமான விஷயங்களிலிருந்து கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்.
கண்ணியத்திற்கான தமிழ்நாட்டு பிராமணர்களின் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தெலுங்கு சகோதரர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று கஸ்தூரி கூறியுள்ளார்.