கள்ளக்குறிச்சி சாவுகள்… கறுப்புச் சட்டையில், வீடியோ ஆதாரத்துடன் ஆவேச எடப்பாடி...

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
Published on

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கறுப்புச் சட்டை அணிந்துவந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை சட்டப்பேரவையில் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதிமுகவைச் சேர்ந்த ஆர் பி உதயகுமார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டார்.

”கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரச்னையை பேச முயன்றபோது எங்களை அனுமதிக்கவில்லை. இப்பிரச்னை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் முதல்வர் இந்த உயிரிழப்புக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும்’’ என்றும் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி  கூறினார்.

”அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகிற 24 ஆம் தேதி  தமிழகம் முழுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சித் தலைவர் பேசுவதை ஒளிபரப்பு செய்வது கிடையாது. எங்களை கள்ளச்சாராயம் குறித்து மரணம் அடைந்தவர்கள் பற்றிப் பேச வாய்ப்பளிக்காமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகேயே கள்ளச்சாராயத்தை விற்றிருக்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்தவில்லை. சாராய விஷத்தை முறிக்கும் போமிபெசோல் என்ற மருந்து மருத்துவமனைகளில் இல்லவே இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மூன்று பேர் 19 ஆம் தேதி கள்ளச்சாராயத்தால் இறந்தபோது அவர்கள் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கால், வயது  முதிர்வால் இறந்ததாக மாவட்ட ஆட்சித்தலைவர் பேட்டி அளித்தார். இதை நம்பி மேலும் பலர் அந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதாக ஒரு பெண்மணி பேட்டி அளிக்கிறார். (வீடியோ ஆதாரம் காட்டுகிறார்) இப்படி ஒரு பச்சைப்பொய்யை இந்த அரசின் தூண்டுதலின் பேரில் சொல்கிறார். உண்மைச் செய்தியை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளிய்ட்டிருந்தால் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றிருப்பார்கள். பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அரசின் தூண்டுதலால் இப்படி பேசிய ஆட்சித்தலைவரை மட்டும் மாறுதல் செய்துள்ளனர். ஆனால் பிற அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முழுமையான பொறுப்பேற்று இந்த முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்.

29-03-2023 அன்று எங்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கள்ளச்சாராயம் விற்கப்படுவது குறித்து சட்டப்பேரவையின் கவனத்தை ஈர்க்க தீர்மானம் கொண்டுவர மனு கொடுக்கிறார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதை ஒருவேளை எடுத்துக்கொண்டிருந்தால், பல உயிர்கள் காக்கப்பட்டிருக்கலாம். அதையும் செய்யவில்லை.

இதில் தொடர்புடைய தங்கள் கட்சிக்காரர்களைக் காப்பதில் ஆளுங்கட்சி கவனமாக இருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com