பி.சுசீலா, மு.மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு!

Mu Metha - P Suseela
மு. மேத்தா- பி.சுசீலா
Published on

கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு தமிழக அரசின் 2023ஆம் ஆண்டுக்கான ’கலைஞர்  நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஜூன் 3ஆம் நாளன்று வழங்கப்படும்.

விருதாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும்.

கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான விருது ஏறத்தாழ 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை,  வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள ஆரூர்தாஸ் எனப்படும் திருவாரூர் தாசுக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

திரைப்பட இயக்குநர்  திரு.எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான குழு, மேத்தா, சுசீலா ஆகியோருக்கு விருது வழங்க பரிந்துரை செய்தது. அதை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மு. மேத்தா

கவிஞர் திரு.முகமது மேத்தா அவர்கள் பெரியகுளத்தில்                  1945-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் பிறந்தவர்.  தமிழ் மீது தணியாத பற்று உடையவர்; சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி மாணவர்களின் அன்பைப் பெற்றவர். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள், எனப் பல்வேறு நூல்களையும் படைத்து 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி தமது தனி முத்திரைகளைத் திறம்படப் பதித்தவர். அவர் எழுதிய, “ஊர்வலம்” எனும் கவிதை நூலுக்குத் தமிழ்நாடு அரசின் முதல் பரிசும், “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” எனும் கவிதை நூலுக்கு, "சாகித்ய அகாடமி" விருதும் பெற்ற பெருமைக்குரியவர்.


பி.சுசீலா

இசைக்குயில் திருமதி.பி.சுசீலா அவர்கள் 1935-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13-ஆம் நாள் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர். இசை மீது கொண்டிருந்த அதீத பற்றின் காரணமாக ஆந்திராவின் புகழ்பெற்ற இசைமேதை துவாரம் வெங்கிடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்று 1950-ஆம் ஆண்டு சென்னை வானொலியில் ’பாப்பா மலர்’ எனும் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். தேனினும் இனிய தனது குரலால் அனைவரையும் கவர்ந்து, ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், 25,000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில்  தொடர்ந்து பாடி சாதனைகள் படைத்தவர். இசையுலகத்தினராலும், ரசிகர்களாலும் “இசைக்குயில்” என்றும், “மெல்லிசை அரசி” என்றும், ‘கான கோகிலா” என்றும் பாராட்டப்பட்டவர் அவர். சிறந்த பின்னணிப் பாடகி எனத் தமிழ்நாடு அரசின் விருதுகளையும், ஒன்றிய அரசின் விருதுகளையும் பலமுறை பெற்றுள்ளதோடு, இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியமைக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்ற பெருமைக்குரியவர்.

இவர்கள் இருவருக்கும் வரும் 30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் விருது வழங்குகிறார்.


logo
Andhimazhai
www.andhimazhai.com