கீழடி புகழ் அமர்நாத் ராமகிருஷ்ணா இடமாற்றமா? - எதிர்ப்பு வலுக்கிறது

கீழடி புகழ் அமர்நாத் ராமகிருஷ்ணா இடமாற்றமா? - எதிர்ப்பு வலுக்கிறது
Published on

தொல்லியல் அதிகாரி அமர்நாத் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இதுகுறித்து மைய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் - எஸ்.கே. கங்கா, பொதுச் செயலாளர் த. அறம், பொருளாளர் ப.பா. ரமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

”மத்தியத் தொல்லியல் துறையின் தென்மண்டல ஆலயப் பாதுகாப்பு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் பதவிக்காலம் முடியும் முன்பே டெல்லிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். பொதுவாக தொல்லியல் துறையில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பணியிட இட மாறுதல் செய்யப்படும். ஆனால், இரண்டு ஆண்டுகள் முடியும் முன்பே அமர்நாத் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. ஏனெனில், இந்த அதிரடி இட மாற்றத்திற்கான எந்தக் காரணத்தையும் தொல்லியல் துறை தெரிவிக்கவில்லை.

2015ல் மத்தியத் தொல்லியல் துறையின் தென் மண்டல அகழாய்வுப் பிரிவுக் கண்காணிப்பாளராக இருந்தபோது அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாய்வுக்கான அனுமதியை வழங்கினார். இந்தக் கீழடி ஆய்வு இந்தியத் தொல்லியல் துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்பதை உலகமே நன்கறியும். இந்த ஆய்வின் மூலம்2600 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் அற்புதமான நகர நாகரிகம் கீழடியில்தழைத்தோங்கி இருந்திருக்கிறது என்ற பேருண்மை உலகிற்கு வெளிச்சமாகியது.

மத்திய தொல்லியல் துறையில் ஒரு அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, அது நிறைவுறும் முன்பே, அதன் பொறுப்பு அதிகாரியை மாற்றுவது மரபு இல்லை. இந்த மரபை மீறி, கீழடி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காரணத்தாலேயே, அந்த அகழ்வாய்வுப் பணி நடந்து கொண்டிருக்கும் போதே, அவசரகதியில் அமர்நாத் அவர்கள் அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும், கீழடி ஆய்வுப் பணிகள் முடக்கப்பட்டன என்பதும்நாடறிந்த உண்மை.

பல்வேறு போராட்டங்களுக்குப் பின்தான் மீண்டும் கீழடி அகழ்வாய்வுப்பணிகள் தொடங்கப்பட்டன என்பதும், கீழடி ஆய்வு அறிக்கை நீதிமன்ற உத்தரவின் பிறகே வெளியிடப்பட்டது என்பதும் நாம் அறிந்ததே. எனவே கீழடி ஆய்வில் ஒன்றிய அரசு பாரபட்சமான அணுகுமுறையை கொண்டிருக்கிறதுஎன்பது வெள்ளிடைமலை.2021 அக்டோபரில் சென்னையில் உள்ள மத்தியத் தொல்லியல் துறையின் ஆலயப் பாதுகாப்புக் கண்காணிப்பாளர் பணி இடமாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் அவர்கள் கீழடி அகழ்வாய்வு குறித்த அறிக்கையைத் தயாரித்து மத்தியத் தொல்லியல் துறைக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கினார். வழக்கம் போலவே மத்தியத் தொல்லியல் துறை அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் உள்ள கல்வெட்டுகள், சிலைகள், கட்டிடக்கலை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து உண்மையான வரலாற்றை வெளியிடும் வகையில் ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை தமிழக அரசிடம் அமர்நாத் கோரி இருந்தார். தமிழக இந்து சமய அறநிலைத்துறை இம்மாதம் 6 ஆம் தேதி பல்வேறு நிபந்தனைகளுடன் பிராதனக் கோயில்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பணிக்கு அனுமதி அளித்தது. இவ்வாறு கீழடி ஆய்விலும், தமிழ்நாட்டு கோவில்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த அதிகாரியான அமர்நாத் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஒன்றிய அரசின் உள்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

ஓர் அறிவியல் துறையாகச் செயல்பட வேண்டிய தொல்லியல் துறையில் ஒன்றிய அரசின் தூண்டுதலால், மத்தியத் தொல்லியல் துறையும் அரசியல் உள்நோக்கத்தோடு அமர்நாத்தை இடமாற்றம் செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.எனவே பதவிக்கால முடியும் முன்பே அநீதியாக செய்யப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவை மத்தியத் தொல்லியல் துறை உடனடியாகத் திரும்பப் பெற்று மீண்டும் அதே பணியிடத்தில் அவரைப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மேலும் தொல்லியல் துறை ஓர் அறிவியல் துறை என்பதைக் கருத்தில் கொண்டு, அத்துறை நடவடிக்கைகளில்மூக்கை நுழைத்து அரசியல் பண்ணும்போக்கினை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.” என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com