தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பிரபல ரவுடியுமான சங்கர் கொலை வழக்கில் சாந்தகுமார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இந்த சூழலில் சாந்தகுமாரை செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது உடல் நலக்குறைவு காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சாந்தகுமார் அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், தனது கணவருக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவரது மரணத்திற்கு காவல் துறையினர் தாக்குதலே காரணம் என்றும் சாந்தகுமார் மனைவி குற்றம்சாட்டினார்.
சாந்தகுமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில், சாந்தகுமார் கன்னத்தில் ரத்தக்கட்டு, வீக்கம் இருந்ததாகவும், உடலின் பின்புறத்திலும் வீக்கம் காயங்கள் இருந்தன என்றும், இரண்டு உள்ளங் கைகளிலும் ரத்த கட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. எனினும், அவரது மரணத்திற்கு உடலிலிருந்த காயங்கள் காரணம் இல்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவுபடுத்தியது.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப் பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல் நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடலில் ரத்தக் கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, “இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல் துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு திமுக அரசையும் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.