பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்களில் இன்று காலை 7 மணி முதலே வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, திருவண்ணாமலையில் மட்டும் அவருக்குத் தொடர்புடைய சுமார் 40 இடங்களில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது, அவரின் உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரிச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
அதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைதுசெய்தது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து தி.மு.க. அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.