‘நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே இருக்காது’ - சீறிய சீமான்

சீமான்
சீமான்
Published on

“நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே இருக்காது” என்று கூறிய சீமான், “நடிகர் விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் நான் விஜயை ஆதரிக்கத்தான் செய்வேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்த கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் "திராவிடல் நல் திருநாடு" என்ற வார்த்தையை விட்டுட்டாங்க, தூக்கிட்டாங்க என்பது தானே உங்களுக்கு பிரச்சினை. அதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஆரியங்கோல் வழக்கொழிந்து என்ற வார்த்தையை தூக்கியது யாரு?. கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய அந்த வரியை தூக்கியது யாரு?. திராவிடன் என்ற ஒரு சொல்லை எடுத்ததற்கே இப்படி குதிக்கிறீர்களே?

50 ஆயிரம் ஆண்டுகளுன் முன் தோன்றிய என் தாய்மொழி தமிழை கொன்று சமாதி கட்டி வைத்திருக்கிறீர்களே... கொத்துக்கொத்தாக, லட்சக்கணக்கான என் இன மக்கள் சாவும் போது கொதித்து வராத கோவம்... ஆந்திர காடுகளில் எங்களை சுட்டுக்கொல்லும் போது வராத கோபம்... அன்னை தமிழ் மொழி செத்துவிழும் போது வராத கோபம் இப்போது ஏன்?... இவ்வளவு கோபப்படுறீங்க.. இதே ஆளுநர் 100 ரூபாய் வெளியிடும் போது கட்டிப்பிடித்து அணைத்துக்கொண்டீர்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பாடலே இருக்காது. என்ன பண்ணுவீங்க? இது எங்க நாடு. எங்கே இருக்கிறது திராவிடம்? எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்? திராவிடம் என்றால் என்ன? கேரளாவில் பஞ்ச திராவிடர் மாநாடு நடந்ததா இல்லையா? அதில் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்க வேண்டும். அவர் ஏன் ராகுல் டிராவிட் என அழைக்கப்படுகிறார். நான் எப்படி திராவிடர் ஆனேன்? என்னது இது? திராவிடம் என்பது சமஸ்கிருதம் சொல்.

தமிழ் எழுத படிக்கத் தெரியாத மூன்று தலைமுறைகளை உருவாக்கியது, தெருவிற்கு இரண்டு படிப்பகத்திற்கு பதில் இரண்டு குடிப்பகம் கொண்டுவந்ததுதான் திராவிடத்தின் சாதனை. கல்வி, மருத்துவம், வரி உரிமைகளைப் பறிகொடுத்துவிட்டு மாநில உரிமைகள் குறித்து பேசுகின்றனா். தமிழன் ஏன் திராவிடனாக இருக்க வேண்டும்? கீழடியில் கண்டெடுக்கப்பட்டது தமிழா் நாகரிகம்தான். திராவிட நாகரிகமோ, இந்திய நாகரிகமோ அல்ல.

5 தென் மாநிலங்களில் ஆளுநா்களை மாற்ற உள்ளனா். உடனே நாங்கள் கொந்தளித்ததால்தான் ஆளுநா் மாற்றப்பட்டாா் என்பதற்குதான் இதனைப் பற்றி பேசுகின்றனா்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சீமான் கூறியதாவது:

” சென்னையில் மழைநீா் வடிகால் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில் படகு எதற்கு? தலைநகரில் அடிப்படை கட்டமைப்பு இல்லை. சென்னையில் மழை வெள்ளத்தை வடிக்க முடியவில்லை. திசைதிருப்ப திராவிடம் வந்துவிட்டது. தீபாவளிக்கு தற்காலிகமாக 1500 மதுக் கடைகள் திறக்க உள்ளனா். இதனை கவனத்தில் கொள்ளாமல் இருக்க ஆளுநா் இப்படி செய்துவிட்டாா் என்கின்றனா்.

சேலத்தில் திமுக மாநாட்டின் போது கேட்கப்படாத கேள்விகள் தம்பி விஜய் மாநாட்டில் கேட்கப்படுகிறது. விஜய்க்கு மட்டும் இவ்வளவு இடையூறு செய்வது எதற்காக?.

யானை சின்னத்தை அகற்றக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பியதை எல்லாம் விஜய் கண்டுகொள்ளமாட்டார். யானை என்ன ஒரு கட்சிக்கு மட்டும் தான் சொந்தமா?. தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக இப்படி விஜயை இடையூறு செய்கிறார்கள். அவ்வளவு தான். நடிகர் விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் நான் விஜயை ஆதரிக்கத்தான் செய்வேன். ஏனென்றால் விஜய் என்னுடைய தம்பி.” இவ்வாறு சீமான் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com