பொதுக் கிணற்றில் மனிதக் கழிவு கலப்பா?- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட தேன் அடை
கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட தேன் அடை
Published on

விழுப்புரம் அருகே கிணற்றில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், கிணற்றில் இருந்தது தேன் அடை என மாவட்ட ஆட்சியர் பழனி விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கே.ஆர்.பாளையம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்த ஊர் மக்களின் பயன்பாட்டுக்காக அருகில் உள்ள திறந்தவெளிக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலையில் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக சிலர் புகார் கூறினர். அதையடுத்து, பலரும் திரண்டு கிணற்றுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அடையாளம் காணமுடியாத பொருட்கள் கிணற்றில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கிணற்றுக்குள் மலம் கலக்கப்பட்டு இருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, ஊர் முழுவதும் தகவல் பரவியது.

தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, உடனடியாக அதிகாரிகளை அங்கு சென்று ஆய்வுசெய்ய அறிவுறுத்தினார். அதன்படி, அதிகாரிகளும் நேரில் சென்று கிணற்றிலிருந்த பொருட்களை ஆய்வுசெய்தனர்.

அப்போது, அது மனிதக்கழிவு அல்ல; தேன் அடை என்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, கிணற்றின் மீது இரும்புக் கம்பிவேலி அமைத்து குப்பைகள் உள்ளே விழாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி

இது குறித்து விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ரவிக்குமார் தன் எக்ஸ் பக்கத்தில், ”விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளை எச்சரிக்கையாகக் கையாளவேண்டும்.” அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் ஆட்சியரையும் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com