வேங்கை வயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவைக் கொட்டிய குற்றவாளிகள் இன்னும் பிடிபடாத நிலையில், அரசுப் பள்ளியில் பூட்டுகளில் மனிதக் கழிவைப் பூசி அட்டூழியம் செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த குரூரம் அரங்கேறி இருக்கிறது. சுமார் 400 மாணவர்கள் இங்கு படித்துவரும் நிலையில், பள்ளியின் சுற்றுச்சுவர் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. இதுகுறித்து புகார்கள் தெரிவித்தும் சரிசெய்யப்படாத நிலையில், சமூகவிரோதிகள் பள்ளிக்குள் அத்துமீறி அக்கிரமம் செய்கின்றனர்.
இந்த நிலையில், இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மூன்று வகுப்பறைகளின் பூட்டுகளில் மனிதக் கழிவைப் பூசியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வந்தனர்.
உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோரும் பள்ளிக்கு முன்பாக மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவர்களுடன் பேசி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர்.
மாவட்ட நிர்வாகம் இதில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் தரப்பில் வலியுறுத்தினர்.