அன்னபூர்ணா விவகாரம் - நிர்மலா சீதாராமன் செயல் வெட்கப்பட வேண்டியது: முதல்வர் விமர்சனம்!

சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது
சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது
Published on

அமெரிக்க சுற்றுப்பயணத்தில் 19 நிறுவனங்களுடன் ரூ.7,618 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறைப் பயணமாக 17 நாட்கள் அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

“அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறேன். இது வெற்றிகரமாகவும் சாதனை பயணமாக அமைந்திருக்கிறது.

உலக புகழ்பெற்ற 25 நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தியிருக்கிறேன். இந்த சந்திப்பில் 19 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. 7,618 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 11516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல மாவட்டங்களில் முதலீடுகள் வர உள்ளன.

இன்னும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வர ஒப்புதல் தந்துள்ளன. தமிழ்நாட்டில் 30 ஆண்டுகாலமாக செயல்பட்டு சில சூழல் காரணமாக உற்பத்தியை நிறுத்திய போர்டு நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியைத் தொடங்க உள்ளது. அவர்கள் உற்பத்தியைத் தொடங்க எல்லா உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

நான் முதல்வன் திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி வழங்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும் வணிகம் செய்ய ஏற்ற சூழல் நிலவுகிறது. உலகம் எங்கும் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு மேற்கொள்ள விரும்புகிற மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விக்கு அவர் அளித்த பதில்:

அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் பற்றி கூறியிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் தொழில்துறை அமைச்சர் புள்ளி விவரங்களோடு விளக்கியிருக்கிறார். சட்டமன்றத்திலும் சொல்லியிருக்கிறார். அதை எடப்பாடி பழனிசாமி படித்துப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றார். அதில் 10 விழுக்காடு ஒப்பந்தங்கள் கூட நிறைவேற்றப்படவில்லை. அதை சொன்னால் அவமானமாகிவிடும்.

ஜி.எஸ்.டி. குறித்த நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த சீனிவாசனை நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஜிஎஸ்டி விவகாரத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேச உள்ளேன்.

இப்போது வந்திருக்கின்ற முதலீடுகள் நூற்றுக்கு நூறு நிறைவேற்றுவோம்.” என்றார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com