மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுக்களை ஆளுநர் ஆர்.என். இரவி இன்று மாலை தானாக அறிவித்தார். இது அப்பட்டமான மரபு மீறல், விதிமீறல் என்றும் சட்டப்படி இதை எதிர்கொள்ள உள்ளதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் புதனன்று இரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு விவரம்:
”தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களுக்கான தனித்தனியான சட்டம் மற்றும் விதிகள் உள்ளன. இவற்றின்படி துணைவேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அதற்கான தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதன்மூமை் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்.
உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக விதிகளில், ஆளுநர், துணைவேந்தரைத் தேர்வுசெய்யும் குழுவை அமைக்க வழிமுறை இல்லை. பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 17.10.2022 அன்றும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 30.11.2022 அன்றும் முடிவடைந்ததால், தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலை. விதிகளின்படி நியமனம் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசிதழில் முறையே 20.09.2022 மற்றும் 19.10.2022 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதுவரை எந்த ஓர் ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விவரங்களை அரசுதான் அரசிதழில் வெளியிடும். இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்களை அந்தந்தப் பல்கலை. விதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசிதழில் வெளியிட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆளுநர் நடைமுறையில் உள்ள பல்கலை. விதிளைுக்கு எதிராக தேடுதல் குழுக்களை தன்னிச்சையாக முடிவுசெய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேடுதல் குழு முழுக்க பல்ககலை சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது. அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும், ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது, மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது.
தெலங்கானா, குஜராத் மாநில பல்கலை.களில் உள்ளதுபோல் பல்கலை. துணைவேந்தரைத் தெரிவுசெய்யும் அதிகாரம் அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்டமசோதா 25.04.2022 அன்று நிறைவேற்றப்பட்டு, 28.04.2022 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கபட்டது. ஆனால், இது நாள்வரை அந்த மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் தரப்படவில்லை. ஆளுநர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கைக்கழகம் மற்றும் சென்னை பல்கைக்க்கழகங்களின் துணைவேந்தர் தெரிவுக்குழுவை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்.” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.