வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் முதலாளி என்ற குரங்கு குட்டியை வளர்க்க உரிமை கோரி கால்நடை மருத்துவர் வள்ளியப்பன் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் டாக்டர் வள்ளியப்பன். கால்நடை மருத்துவரான இவர் பிராணி மித்ரன் என்ற விலங்குகள் நல சேவை அமைப்பை நடத்துகிறார். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக சோளிங்கரில் தெருநாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி முகாம் நடத்தியபோது, அவரிட்ம் வனப்பாதுகாவலர் ஒருவர் நாய்களால் கடிக்கப்பட்ட குரங்குக் குட்டி ஒன்றை சிகிச்சைக்காக அளித்தார். அதை தன் சொந்த மகனாகப் பாவித்து சிகிச்சை அளித்து பத்து மாதங்களாக வளர்த்துவந்தார் வள்ளியப்பன். அந்த குரங்குக் குட்டிக்கு முதலாளி என்றும் பெயர் சூட்டினார்.
இந்த குரங்குக் குட்டியை வனத்துறை பறிமுதல் செய்து தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்துள்ளது. இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட இந்த குட்டி முதலாளிக்கு சிகிச்சை அளிக்க உரிமை கோரி வள்ளியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதைத் தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்று அந்த குட்டியைக் கண்டு அறிக்கை தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவர் வள்ளியப்பனின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. வனத்துறை தரப்பில் குரங்குக் குட்டிக்கு நல்ல சிகிச்சையும் உணவும் வழங்கப்படுவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து குரங்குக் குட்டியை மருத்துவரிடம் ஒப்படைக்க மறுத்த நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.