விடிய விடிய மழை: வெதர்மேன் கொடுத்த டமால் டுமீல் அப்டேட்!

மழை
மழை
Published on

தமிழ்நாடு முழுவதும் இன்று டமால் டுமீல் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழகத்திற்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் என்னா ஒரு அற்புதமான நாள். சென்னையில் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது, அதுபோல் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

இது தொடக்கம்தான், இனி டமால் டுமீல் மழையானது தமிழகம் முழுவதும் தொடரும். இன்று வெயில் வரும், அதன் பிறகு மேகங்கள் வலுவிழக்கும், மழையும் குறைந்துவிடும்.” என்று கூறியுள்ளவர், இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் எங்கெல்லாம் எவ்வளவு மழை பதிவாகியுள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளார்.

அதுபோல் அவருடைய மற்றொரு பதிவில், ”ராமநாதபுரத்திலிருந்து சென்னை வரை மேகமூட்டங்கள் சூழ்ந்துள்ளன. எனவே கனமழை பெய்யும். அடுத்த 10 நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும். அடர்ந்த மேகங்கள் தஞ்சை, அரியலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நுழைந்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக நெய்வேலியில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அது போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மேலும், மழை தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். கடலூர், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com