சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் வல்லுநர் பாலாஜி நேற்று கத்தியால் கொடூரமாகக் குத்தப்பட்டார். கழுத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் உட்பட ஏழு இடங்களில் அவருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
அவர் அங்கேயே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். துணை முதலமைச்சர் உதயநிதி அவரை நேரில் சென்று பார்த்தார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் முதலியவர்களும் மருத்துவர் பாலாஜியை மருத்துவமனைக்குள் சென்று பார்த்தனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் அவரைச் சென்று பார்த்தார், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். பாலாஜி நலமுடன் இருப்பதாக அவர் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.
இதனிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துவரும் மருத்துவர் பாலாஜியை சக மருத்துவர்கள் பலரும் காலையில் சந்தித்துப் பேசினர். அப்போது, அவரிடம் வீடியோவில் பேசும்படி ஒருவர் கேட்க, அவரும் பேசத் தொடங்குகிறார்.
“ இன்றைக்கு திடமாக இருக்கிறேன். நெபுலைஸ் செய்யவேண்டும் என நினைக்கிறேன். இதயத்தைப் பரிசோதிக்க வேண்டும். பேஸ் மேக்கர் வைத்திருப்பதால் அதையும் சோதிக்கவேண்டியிருந்தது. இசிஜியும் நேற்று எடுத்திருக்கிறார்கள். தையல் போட்ட இடங்களில் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக, ஆண்டிபயாட்டிக்ஸ் எடுக்கிறேன்.” என்று மருத்துவர் சொல்லிக்கொண்டிருந்தபோது, ஒருவர் குறிக்கிட்டு,
“இப்போது எப்படி இருக்கிறாய், பாலாஜி?” என்று கேட்டார்.
அதற்கு உடனே, தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்திலிருந்து ஒரு ஸ்பூன் உணவை அவராகவே எடுத்துச் சாப்பிட்டபடியே, “ திடமாக இருக்கிறேன்.” என்று மருத்துவர் பாலாஜி கூறினார்.
இப்படியாக அந்தக் காணொலிக் காட்சி முடிவடைகிறது.