எல்லை தாண்டியதால் மீனவர்கள் கைது - மத்திய அமைச்சர் எல். முருகன் பகீர் தகவல்!

எல்.முருகன்
எல்.முருகன்
Published on

இராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தேவையற்றது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேர், அவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இராமேஸ்வரத்தில் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஈரோட்டில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து மீனவர்கள் மீது ஒரு துப்பாக்கிச்சூடும் நடத்தப்படவில்லை. மீனவர்கள் எல்லைத்தாண்டிப் போகும்போது அவர்களை கைது செய்வது தொடர்ந்து நடக்கிறது.” என்றார்.

மேலும், “வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் அவர்களை மீட்டு வருகிறோம். இராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தேவையற்றது. மீனவர்கள் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இந்தியா-இலங்கை குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்." என்று கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது ‘ஜெய் சிரீராம்’ கோசம் எழுப்பப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், 'ஜெய் சிரீராம்…ஜெய் சிரீராம்…' என திரும்பத் திரும்ப கோசமிட்டபடி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நகர்ந்தார். இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்து நின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com