நிதி மோசடி… வேட்பாளரைப் பாதுகாக்கிறார் அண்ணாமலை! – ஆனந்த் சீனிவாசன் குற்றச்சாட்டு

செய்தியாளர் சந்திப்பில் ஆனந்த் சீனிவாசன்
செய்தியாளர் சந்திப்பில் ஆனந்த் சீனிவாசன்
Published on

நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை பாதுகாக்க அண்ணாமலையும் தமிழிசை செளந்தராரஜனும் முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் ஊடகம் - செய்தித்தொடர்புத் துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன், வழக்கறிஞர் சூரிய பிரகாசம், சட்டத்துறை துணைத் தலைவர் எஸ்.கே. நவாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஆனந்த் சீனிவாசன் தன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் ’தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்’ நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பெண் ஒருவரின் உரையாடலை ஒலிக்கவிட்டார்.

பின்னர் ஆனந்த் சீனிவாசன் கூறியதாவது:

“மயிலாப்பூரில் ஒரு நிதி நிறுவனத்தில் மோசடி நடந்தது தொடர்பாக சில நாள்களுக்கு முன்னர் ட்வீட் செய்திருந்தேன். அதை இரண்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. இந்த மோசடி தொடர்பாக ஆதாரங்களைத் திரட்டி உள்ளோம். சுமார் ரூ. 300 முதல் 500 கோடி வரை மோசடி நடந்துள்ளது. வேதநாதன் அளித்துள்ள காசோலை 4 மாதமாக வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பி வந்துள்ளன. இப்படியான நிலையில், மோசடி செய்த நிதி நிறுவனத்தின் எம்.டி.யான தேவநாதனுக்கு அண்ணாமலை எப்படி ’பி படிவத்தில்’ கையெழுத்திட்டார்?

நிதி மோசடி செய்துள்ள பாஜக வேட்பாளர் வேதநாதனை, அண்ணாமலையும் தமிழிசையும் பாதுகாக்கக் கூடாது.” என்று ஆனந்த் சீனிவாசன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் சூர்யபிரகாஷ், ”150 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வந்த “தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்” நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

தேவநாதன் மோசடி செய்த விவகாரத்தைப் பாதிக்கப்பட்ட மக்கள் அண்ணாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், இதுவரை ஒரு சின்ன நடவடிக்கை கூட எடுக்கவில்லை.

முதலீடு செய்தவர்களை ஏமாற்றிய விவகாரம் என்பதால், காங்கிரஸ் கட்சி இதை கையிலெடுத்துள்ளது. தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவநாதன் பா.ஜ.க. வேட்பாளர்கள் என்பதால் அக்கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அண்ணாமலையும் தமிழிசை செளந்தரராஜனும் தேவநாதனை பாதுகாப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com