கொடுத்த வாக்கை மீறி நில ஒருங்கிணைப்புச் சட்டம் கொண்டுவறீங்களே... விவசாயிகள் வேதனை!

delta land
டெல்டா (கோப்பு படம்)
Published on

விவசாயிகளையும், விவசாயத்தையும், நீர்நிலைகளையும் அழித்தொழிக்கும் தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. இச்சட்டத்தை உடனே திரும்ப பெறவேண்டும் என்றும் அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் கூறியுள்ளார்.


”கடந்த 21.4.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நில ஒருங்கிணைப்பு சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. அம்மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆகஸ்ட் 23ல் ஒப்புதல் அளித்தார். 


இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 17.05.2023 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க அமைப்புகள் சார்பில் விவசாயிகளிடம் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதன் பின்னர் 22.6.2023 அன்று சென்னையில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இச்சட்டத்திற்கு எதிராக விவசாயிகளும், பல்வேறு விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.” என இந்த சட்டம் கொண்டுவரப்படுவதையொட்டி நடைபெற்ற சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தமிழக அரசு கடந்த ஓராண்டு காலமாக இச்சட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது என்றும் தற்போது இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்டவிதிகளை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

”தி.மு.க. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியில், அரசு திட்டங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும்போது விவசாயிகள் ஒப்புதல்பெற்று செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தது. அந்த வாக்குறுதிக்கு நேரெதிரானது இந்தச் சட்டம். எதிர்காலத்தில் விவசாயிகளையும், விவசாயத்தையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க தமிழக அரசு நினைத்தால் தற்போது கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெறுவதே விவசாயிகளுக்குச் செய்யும் நன்மை.” என்று சாமி. நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com