சாம்சங் விவகாரம்- களமிறங்கும் விவசாயிகள், அதிரடி முடிவு!

Samsung workers strike
சாம்சங் தொழிலாளர் போராட்டம்
Published on

தீவிரமாக நடைபெற்றுவரும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். வரும் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமிநடராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம் ஆகியோர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். 


அதன் விவரம்:

“காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சாம்சங் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிவரும் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9ந் தேதியிலிருந்து தொடர்ந்து 25 நாட்களாக தங்களுடைய அடிப்படை உரிமைகளைக் கேட்டு தொடர் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். அங்கு பணியாற்றிடும் தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு அடிப்படையாக தங்களுக்கென்று சங்கம் அமைத்து பதிவு செய்வதற்கு மாநில தொழிலாளர் நலத்துறையிடம் முறையாக விண்ணப்பித்தும் இதுவரை சங்கம் பதிவு செய்யப்படாத காரணத்தினால் தான் தொழிலாளர்கள் போராட்டம் நீடித்து வருகிறது. 

தமிழ்நாடு அரசாங்கம் சட்டத்திற்குட்பட்டு தொழிலாளர்கள் சங்கப்பதிவை இதுவரை செயது தராமலும், தொழிலாளர்களின் கூட்டுப்பேர உரிமையைப் பாதுகாப்பதற்கு மாறாக சாம்சங் பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆதரவாக போராடி பெற்ற தொழிற்சங்கம் அமைத்திடும் உரிமையை மாநில அரசே மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. மத்திய - மாநில அரசுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் சாம்சங் பன்னாட்டு நிறுவனம் இங்கு செயல்பட்டுவருகிறது. அப்படி செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனம் இங்குள்ள தொழிலாளர் நல சட்டங்களை மதிக்கமாட்டோம். அதை நாங்கள் நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று அடாவடித்தனமாக செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் செயல்பாட்டை மாநில அரசு கண்டிக்காமலும், தொழிலாளர் நல சட்டங்களை கட்டாயம் செயல்படுத்திட வேண்டும் என்று மாநில அரசு அந்நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுக்காமல், சட்டரீதியான கோரிக்கைகளை நிறைவேற்றிட தொடர் போராட்டத்தை நடத்திவரும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை முறியடிப்பதற்கு காவல்துறையை பயன்படுத்தும் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.” என்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com