பிரியாணி மேன் அபிஷேக் ரபி
பிரியாணி மேன் அபிஷேக் ரபி

சோஷியல் மீடியா சண்டை… நேரலையில் தற்கொலை... பிரபல யூடியூபர் கைது!

Published on

பிரபல யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் ரபி இன்று சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவர் அபிஷேக் ரபி. இவர் வெளியிடும் வீடியோக்கள் 2கே கிட்ஸ் மத்தியில் செம பிரபலம். சமீபத்தில் செம்மொழி பூங்காவை ஓயோ ரூமுடன் ஒப்பிட்டு அவர் வெளியிட்டிருந்த வீடியோ வைரலானதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இவரின் பெரும்பாலான வீடியோக்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக பேசப்பட்டன.

அதேபோல், கடந்த ஒரு மாத காலமாக யூடியூபர் இர்பானை விமர்சித்து பிரியாணி மேன் சேனலில் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டன. இவற்றில் இர்பானின் கார் விபத்து குறித்தும், அவரின் குழந்தை பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரம் குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதிலடி தரும் விதமாக இர்பானும் வீடியோ வெளியிட்டிருந்தார். இர்பானின் வீடியோவுக்கு பதிலடி தரும் விதமாக பிரியாணி மேன், மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டு விமர்சித்திருந்தார். சமூக ஊட்டங்களில் இர்பான் - பிரியாணி மேன் சண்டை பேசு பொருளாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்ஸ்டாவில் பிரபலமாக திகழும் தயாளு டிசைன்ஸ் எனும் டெய்லரிங் கற்றும் தரும் 'டெய்லர் அக்கா'

தயாளு குறித்தும் பிரியாணி மேன் விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் பிரியாணி மேனை பலர் விமர்சித்திருந்தார்கள்.

இந்நிலையில், பிரியாணி மேன் சேனலில் நேரலையில் பேசிக் கொண்டிருந்த அபிஷேக் ரபி திடீரென தற்கொலைக்கு முயன்றார். நேரலை வீடியோ பார்த்துக் கொண்டிருந்த ரபியின் நண்பர்கள் அவரது தாயை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியதும், அவர் போய் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பிரியாணி மேன் அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் யூடியூபர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும் பின்னர் அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com