கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

எடப்பாடி, அண்ணாமலை பரஸ்பரம் தாக்கு... அப்போ அம்புட்டுத்தானா?

Published on

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையும் மாறிமாறி இன்று கடுமையாகப் பேசிக்கொண்டனர். 

அண்ணாமலை நேற்று அளித்த பேட்டியொன்றில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பயம் காரணமாகவே அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்றும் மூன்றாவது, நான்காவது இடத்துக்குத் தள்ளப்படுவோம் என அச்சம் ஏற்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அதற்குப் பதிலளிக்கும்படியாக இன்று கோவையில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையையும் பா.ஜ.க. பற்றியும் காரசாரமாகப் பேசினார். குறிப்பாக, 100 நாள்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று பொய் கூறி அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் என்றும் இப்படிப்பட்டவர் மாநிலத் தலைவராக இருப்பதால்தான் தற்போது பா.ஜ.க. தொகுதி குறைந்து கூட்டணி ஆட்சியை நடத்துகிறது என்றும் பழனிசாமி குறிப்பிட்டார். 

இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை பழனிசாமிக்கு பதிலடியாகவே ஒரு பேட்டியை அளித்தார் என்று சொல்லலாம். பேட்டியின் பெரும்பான்மை நேரமும் பழனிசாமியைப் பற்றி கடுமையாகவே அவர் குறிப்பிட்டார். நம்பிக்கைத் துரோகி என்பது பழனிசாமிக்குதான் பொருந்தும்; அவருக்கு அங்கீகாரம் அளித்த பிரதமர் மோடியின் முதுகில் குத்தியவர் என்று காட்டமாகத் தாக்கினார், அண்ணாமலை. 

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையிலான கூட்டணி உடைந்துபோனாலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இணக்கத்துக்கு வாய்ப்பு இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இரு தரப்பிலும் தலைவர்கள் காட்டமாக கருத்து வெளியிடுவதைப் பார்த்தால், அதற்கான வாய்ப்பு அருகிவிடும் என்றே தெரிகிறது.   

logo
Andhimazhai
www.andhimazhai.com