லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக டி.ஜி.பி-யிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
மதுரையிலுள்ள துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றிவந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, தன்னிடம் லஞ்சம் கேட்பதாக சுரேஷ்பாபு என்பவர் கடந்த நவம்பர் 30ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் மீண்டும் லஞ்ச பணம் கொடுக்கும் போது அவர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, மதுரையிலுள்ள தபால் தந்தி நகர் பகுதியிலுள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்திலும், அங்கித் திவாரி வீட்டிலும் விடிய விடியச் சோதனை நடத்தினர். மேலும், குற்றம் உறுதியானதால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அங்கித் திவாரியைக் கைது செய்தது.
இந்த நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது சட்ட விரோதம். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக டி.ஜி.பி-யிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், "1ஆம் தேதி மதியம் 1:30 மணியளவில் இருவர் வந்தார்கள். புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். அவர்களிடம் அடையாள அட்டைக் கேட்டதும், எங்களைத் தவிர்த்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அதைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் கழித்து அத்துமீறி 35 பேர் கொண்ட குழு ஒன்று எங்கள் அலுவலகத்தில் நுழைந்தது. தங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டார்கள். அதில் பலரும், சீருடையில் இல்லை.
அவர்களிடம் அடையாள அட்டைகளைக் கேட்டபோது, அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. மதுரை டி.எஸ்.பி சத்யசீலன் மட்டும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வாரண்ட்டை காண்பித்தார். 1ஆம் தேதி மதியம் 2:30 மணி முதல் மறுநாள் காலை 7:20 மணி வரை எங்கள் அலுவலகத்தில் சோதனையிட்டார்கள். அப்போது, அங்கிருந்த பலரால் பல்வேறு கேள்விகள் துருவித் துருவிக் கேட்கப்பட்டோம். அந்த35 பேரும் அங்கித் திவாரி அறையில் நுழைந்து, இந்த வழக்குக்குச் சம்பந்தமில்லாத வழக்குகளின் கோப்புகளை ஆய்வு செய்தார்கள்.
அமலாக்கத்துறை அதிகாரியின் அறை பூட்டப்பட்டு, அதிகாரப்பூர்வமற்றவர்களும் அந்த அறையில் சோதனையில் ஈடுபட்டார்கள். ஒட்டுமொத்த அலுவலகத்தையும் கலைத்துப் போட்டுத் தேடுதலில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து பல்வேறு வழக்குகள் தொடர்பாக வெளியே இருப்பவர்களுடன் தொடர்பிலிருந்து தகவலளித்துக் கொண்டிருந்தார்கள். அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் மட்டுமே இருந்த அலுவலகத்தில் சில கோப்புகள் சீல் வைக்கப்பட்டன.
இவ்வளவு நடந்ததில் சிலர் மட்டுமே அதிகாரப்பூர்வமானவர்களாக இருந்தார்கள். மற்ற 35 பேரும் அதிகாரப்பூர்வமானவர்களா என்பது தெரியவில்லை. இந்த சோதனைக்கு மேலிடத்திலிருந்து அழுத்தமிருப்பதாகவும் கூறினார்கள். எனவே, அத்துமீறி நுழைந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறது.