சென்னை வியாசர்பாடி பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கொல்லப்பட்டார்.
சென்னை 7 கிணறு பகுதியைச் சேர்ந்த காக்கா தோப்பு பாலாஜி சென்னையில் கொலை, கொள்ளை, அடிதடி செம்மரக் கடத்தல் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்தவர். குறிப்பாக, பில்லா சுரேஷ் மற்றும் ரௌடி விஜி ஆகியோர் மீதான கொலை வழக்குகள் உட்பட 5 கொலை வழக்குகளும், 15 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. இவர், வடசென்னை பகுதியில் நாகேந்திரனின் கூட்டாளியாகவும் இருந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் சம்போ செந்தில் தரப்பினர், 2020-ஆம் ஆண்டு தேனாம்பேட்டை அருகே ரவுடி பாலாஜியை கொல்ல முயன்றனர்.
2021-ஆம் ஆண்டில், ஆயுதத் தனிச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட பாலாஜி, பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவானார். அவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், அவர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர்.
அங்கு பதுங்கியிருந்த பாலாஜி, காவல்துறையினரைக் கண்டதும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனையடுத்து, தற்காப்புக்காக காவல்துறையினர், பாலாஜி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த என்கவுன்டரில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற துணை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு, இது இரண்டாவது என்கவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.