மின் கட்டண உயர்வு (மாதிரிப்படம்)
மின் கட்டண உயர்வு (மாதிரிப்படம்)

தேர்தல் முடிந்ததும் மின் கட்டண உயர்வு...! - வலுக்கும் எதிர்ப்பு!

Published on

தமிழகத்தில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மின்சார ஒழுங்கு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது.

இந்த நிலையில், மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55பைசா வரை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய மின்கட்டண உயர்வு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

401 முதல் 500 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.6.15 ஆக இருந்த கட்டணம் ரூ.6.45ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

501 முதல் 600 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.8.15 ஆக இருந்த கட்டணம் ரூ.8.55ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

601 முதல் 800 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.9.20 ஆக இருந்த கட்டணம் ரூ.9.65ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

801 முதல் 1000 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.10.20 ஆக இருந்த கட்டணம் ரூ.10.70ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

1000 யூனிட்டுக்கு மேல் இனி ஒரு யூனிட்டுக்கு ரூ.11.80 மின் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான 100 யூனிட்டுகள் வரையும், குடிசைகளுக்கான இலவச மின்சாரம் வழங்குவது தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மின்கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி – அதிமுக பொதுச்செயலாளர்

நாடாளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்திருக்கிறார். மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த திமுக அரசுக்கு?. சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன் என்று மேடைதோறும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்யவில்லை. சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறார்.

உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம். மக்களை வாட்டி வதைப்பதே இந்த திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற முதலமைச்சசர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துகிறேன்.

அன்புமணி
அன்புமணி

அன்புமணி ராமதாஸ் – பாமக தலைவர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு - தமிழக மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசு.

தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும்.

அமைதியாக இருந்து விட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு.

ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்.

அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலை – தமிழக பாஜக தலைவர்

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, கட்டண உயர்வைப் பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள திமுக அரசு, தற்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது என

திமுக அரசு, கடந்த 2023 - 2024 ஒரு நிதி ஆண்டில் மட்டுமே, ரூ.65,000 கோடிக்கு, மின்சாரம் வாங்கியிருக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மின் உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், இந்த மின்சாரம் வாங்கிய செலவை, பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ளது. நாடு முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தியைப் பெருக்கப் பல மாநிலங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கையில், மாதம் சுமார் ரூ.5,400 கோடி நிதியை, மின்சாரம் வாங்கச் செலவு செய்திருக்கிறது திமுக. மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஷாக் அடிக்கும் மின் கட்டணம் என்றெல்லாம் பேசி காணொளி வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது பொதுமக்களுக்குத் தொடர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். ஆட்சிக்கு வந்தால், மாதாமாதம் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்து விட்டு, மூன்று ஆண்டுகள் கடந்தும், அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார். மாதாமாதம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை இல்லாமல், பொதுமக்கள் ஏற்கனவே 50% அதிகமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, மாதாமாதம் மின் கட்டணத்தைக் கணக்கெடுப்போம் என்று சொல்லி, தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தையே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், திமுகவின் நிர்வாகத் தோல்விக்காக, பொதுமக்கள் மீது கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?

தங்கள் நிர்வாகத் திறனின்மைக்கு, பொதுமக்களைப் பலிகடாவாக்கும் திமுக, உடனடியாக இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தி உள்ளிட்ட மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசின் இந்த திடீர் மின் கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com