கல்வி முக்கியம்... எந்த தடை வந்தாலும் தகர்ப்போம்! - முதல்வர் கறார்

பள்ளி குழந்தையுடன் உரையாடும் முதலமைச்சர் முக ஸ்டாலின்
பள்ளி குழந்தையுடன் உரையாடும் முதலமைச்சர் முக ஸ்டாலின்
Published on

தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி கற்க எது தடையாக வந்தாலும் அதை தகர்ப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், முதல் கட்டமாக 2022இல் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கிவைக்கப்பட்டது. அதனால், 1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்துக்கு மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் காமராஜர் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

அப்போது குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதுடன் அவர்களுக்கு உணவு ஊட்டியும் முதலமைச்சர் மகிழ்ந்தார். தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து தானும் உணவு உண்டார்.

இதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, அண்ணாவின் பிறந்தநாளுக்குத் தொடங்கிய காலை உணவுத் திட்டத்தை இன்று காமராஜர் பிறந்தநாளில் விரிவுபடுத்தியிருக்கிறேன்.

இந்தத் திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடையவுள்ளனர். நாள்தோறும் 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சத்தான காலை உணவை சாப்பிடுகின்றனர்.

இந்த திட்டம் பெற்றோர்களின் சுமையைக் குறைப்பதோடு, மாணவர்களின் வருகையையும் இடைநிற்றலையும் குறைத்திருக்கிறது. இந்த திட்டம் மிடில் கிளாஸ் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

பள்ளி மாணவர்களுடன் உணவருந்தும் முதல்வர் ஸ்டாலின்
பள்ளி மாணவர்களுடன் உணவருந்தும் முதல்வர் ஸ்டாலின்

திமுக அரசு கொண்டு வருகின்ற திட்டங்களை பத்திரிகைகள் பாராட்டுதோ இல்லையோ, பயன்பெறும் மக்கள் பாராட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். இல்லாத கற்பனை கதைகளுக்கு வடிவம் கொடுக்கின்றவர்களுக்கும் ஈரை பேனாக்கும் வேலை செய்பவர்களுக்கும் நம்மைப் பாராட்ட மனமில்லை. எந்த சிறு பிரச்சினை வந்தாலும் அதை உடனே தீர்த்து வைக்கிறோம்.

பொய் செய்திகள் மூலம் கருத்தை உருவாக்கி, அதன் மூலம் குளிர் காய நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காது.

காலை உணவுத் திட்டத்தை நாம் தொடங்கிய பிறகுதான், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டுமல்ல, கன்னடா போன்ற நாடுகளும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்வது, எந்த ஊரிலும் சந்த பள்ளியிலும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது. ஸ்பேசல் கேர் எடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க எதுவும் தடையாக இருக்க கூடாது என்று நினைக்கிறோம். அது பசியாக இருந்தாலும், நீட் தேர்வாக இருந்தாலும், புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் அதை உடைப்பதுதான் எங்களின் முதல் பணி.

நீட் தேர்வு நான் எதிர்க்கத் தொடங்கியபோது, ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். ஆனால், இப்போது முறைகேடுகள் நடப்பதை பார்த்து நீதிமன்றமே கேள்வி கேட்கிறது.

ஒன்றிய பாஜக அரசு நெருக்கடி நிலை காலத்தைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களிடம் ஒன்று கேட்கிறேன், அவசர நிலை காலத்தில் மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றத் தயாரா?

மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாக வேண்டும்.” என்று முதலமைச்சர் பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com