வெளிநாட்டு போட்டோ ஷூட், பகட்டு கார் ரேஸில்தான் கவனம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Edappadi Palanisamy
எடப்பாடி பழனிசாமி
Published on

வெளிநாட்டு போட்டோ ஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனமும் தெரிவித்துள்ளார். 

”திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம்போல சட்டம் ஒழுங்குச் சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன.” என்றும், 

”வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை. திமுக ஆட்சியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது.” என்றும் குறிப்பிட்டுள்ள அவர், 

”இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது.” என்று தன் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ வெளிநாட்டு போட்டோ ஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com