பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகியது சரிதான் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.
சேலம் மாநகரத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி பகுதிகளில் நேற்று வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசுகையில், இக்கருத்தை பழனிசாமி உறுதிப்படுத்தினார்.
” பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய முடிவு நான் மட்டும் அல்ல, கட்சி நிர்வாகிகள் எல்லாரும் கூடி எடுத்த தீர்மானம். இரண்டு கோடி கட்சித் தொண்டர்களின் உணர்வை எதிரொலித்த முடிவு இது.” என்று அவர் குறிப்பிட்டார்.
“ பிரதமர் வேட்பாளர் யார் எனச் சொல்லி வாக்கு கேட்பீர்கள் என சிலர் கேட்கலாம். ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திராவில் எல்லாம் பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டா வாக்கு கேட்டார்கள்? அந்தந்த மாநில உரிமைகளைப் பற்றிப் பேசி வாக்கு கேட்கிறார்கள்; நாமும் தமிழக மக்களின் உரிமைகளைப் பேசி வாக்கு கேட்போம். இந்த முறை வழக்கமான தேர்தலைப் போல அல்ல. சவாலான தேர்தலாக இருக்கும். அ.தி.மு.க. அணி வெற்றிபெற வேண்டும் என்றால் கட்சியினர் கடுமையாக வேலைசெய்ய வேண்டும்.” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.