போதைப் பொருள் கடத்திய விவகாரம்: தி.மு.க. நிர்வாகி நிரந்தர நீக்கம்!

அ.ஜாபர் சாதிக்
அ.ஜாபர் சாதிக்
Published on

டெல்லியில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்த நிலையில், அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த கடத்தல் பின்னணியில், தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்களில் ஜாபர் சாதிக் என்பவர் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்து வந்த நிலையில், அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

”ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மேலும் ஜாபர் சாதிக்குடன் கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com