கண்துடைப்புக்காக குறுவை இழப்பீடு அறிவிக்கக்கூடாது; வாடிய 2 லட்சம் ஏக்கர் பயிருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கவேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இரண்டு லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில், 40,000 ஏக்கருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்திருப்பது கண்துடைப்பு.” என்று குறிப்பிட்டுள்ளார்.
” தமிழ்நாட்டில் கடந்த காலங்களை விட அதிகமாக நடப்பாண்டில் 5.20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குறுவை நடவு செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களாகவே காவிரியில் போதிய அளவில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பதால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. இரு லட்சம் ஏக்கர் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு விட்டன. மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் வாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றிலும் கூட சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களை ஓரளவு பாதிப்புடன் காப்பாற்றி விட முடியும்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் நீர் திறக்கப்படுவது அடுத்த ஓரிரு நாட்களில் நிறுத்தப்படும். அத்தகைய சூழலில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்ய தயாராகாத 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவைப் பயிர்களை காப்பாற்ற முடியாது.
இழப்பீடு வழங்கவேண்டிய தார்மீகக் கடமை தமிழக அரசுக்கு இரு வழிகளில் உள்ளது. முதலாவது, கர்நாடகத்தில் இன்று காலை நிலவரப்படிகூட 66 டி.எம்.சி. தண்ணீர் உள்ள நிலையில், அங்கிருந்து தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது. அத்தகைய கடமை தவறுதலுக்காகவே தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும்.
இரண்டாவதாக, குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கியிருந்தால், தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் இழப்பீடு கிடைத்திருக்கும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை குறுவை நெல்லுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குறுவைக்கு காப்பீடு வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. அதுமட்டுமின்றி, குறுவை பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு ஈடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.” என்று ராமதாசு கூறியுள்ளார்.
”ஓர் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 வரை செலவு ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்.எல்.சி. நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்ட போது, அப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அவற்றைக் கருத்தில் கொண்டு, வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.” என்றும் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.