10 நாள்களில் 3ஆவது சம்பவம்... சென்னையில் சிறுவனைக் கடித்துக் குதறிய நாய்!

மாதிரிப் படம்
நாய்கள்
Published on

தலைநகர் சென்னையில் கடந்த பத்து நாள்களில் மூன்றாவதாக சிறுவன் ஒருவனை நாய் ஒன்று கடித்துக் குதறி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக மாநிலத்தில் பரவலாக நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. முறையாக நாய்களை வளர்க்காமலும் தடுப்பூசி செலுத்தாமலும் விடுவதால், நாய்க்கடி பட்டவர்கள் கடுமையான துன்பத்துக்கு ஆளாகிவருகிறார்கள். குறிப்பாக, குழந்தைகளும் முதியவர்களும் திடீரென நாய் கடிக்க வரும்போது செய்வதறியாது திகைத்துப்போய் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

கடந்த 5ஆம் தேதி ஆயிரம்விளக்கில் பூங்காவில் வளர்ப்பு நாயைக் கூட்டிவந்த ஒருவரின் அஜாக்கிரதையால் சிறுமி ஒருவரை அந்த நாய் கடுமையாகக் கடித்துக் குதறி அப்பல்லோ மருத்துவமனையில் மாநகராட்சியின் சார்பில் சேர்க்கப்படும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி ஆலப்பாக்கம் பகுதியில் வீட்டருகே பேசிக்கொண்டிருந்த ரமேஷ்குமார் என்பவரை, பக்கத்து வீட்டு நாய் பாய்ந்து கடித்துக் குதறியது. நாய் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து விசாரணையில் இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று புளியந்தோப்பு கே.பி.பூங்கா அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில், ஹரிஷ் எனும் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது அதே குடியிருப்பில் இருக்கும் ஸ்டெல்லா என்பவரின் நாய்க்கும் இன்னொரு நாய்க்கும் சண்டை மூண்டது. அதில் பரஸ்பரம் தாக்கிக்கொண்ட நாய்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சிறுவன் ஹரிசை, ஸ்டெல்லாவின் நாய் கடித்துக் குதறியது.

அதில், முகம், கை, முதுகு ஆகியவற்றில் காயமடைந்த சிறுவனை, உடனடியாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர். அங்கு அந்தச் சிறுவன் சிகிச்சை பெற்றுவருகிறார். ஸ்டெல்லா, அவரின் மகள் உட்பட மூவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

மாநகராட்சியின் சார்பில் அண்மையில் நாய் வளர்ப்புக்குக் கடும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டும் மீண்டும் மனிதர்களை நாய் கடிக்கும் சம்பவங்கள் தொடர்வது, பொதுமக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com