மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் சுமுகமாக நடத்தினாலும் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என பா.ஜ.க. தென்சென்னை வேட்பாளர் தமிழிசை கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தான் போட்டியிட்ட தென்சென்னையில் மயிலாப்பூர் 122ஆவது வட்டத்தில் 13ஆவது வாக்குச்சாவடியில் 50 பேர் புகுந்து உள்ளே இருந்த எல்லா கட்சியினரையும் அடித்து மிரட்டிவிட்டு கள்ள ஓட்டு போட முயற்சி செய்தார்கள்; உடனே எங்கள் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்ததும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன; ஆனாலும் அதற்குமுன்னரே அவர்கள் உள்ளே புகுந்துவிட்டார்கள்; அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். இதேபோல சாலிகிராமம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களிலும் முயற்சிகள் நடந்துள்ளன. தியாகராயர் நகரில் சில வாக்குச்சாவடிகளில் நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன.” என்றார்.
தி.மு.க. இப்படி அராஜகத்தில் ஈடுபடக்கூடாது என்றும் தமிழிசை கூறினார்.
கோடிக்கணக்கில் தேர்தல் விளம்பரம் செய்திருக்கிறார்கள்; ஆனால் மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதைத் தேர்தல் ஆணையம் சரிபார்க்கவேண்டும்; மக்கள் சொல்கிறார்கள், எங்களுக்கு உயிர் இருக்கிறது, பட்டியலில் ஆள் இல்லை என்கிறார்கள்; வாக்களிக்காமல் இருப்பது வலியானது; வாக்கு மறுக்கப்பட்டவர்களுக்கு சவால் வாக்களிப்பு போன்றவற்றுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், திங்கள் அல்லது வெள்ளி ஆகிய நாள்களில் வாக்குப்பதிவை வைத்தால், மக்கள் ஒரு நாள் கூடுதல் விடுமுறை என நினைத்து ஊருக்குப் போய்விடுகிறார்கள்; இதனால் வாக்களிப்பு குறைந்துவிடுகிறது; இதை மாற்றவேண்டும் என்றும் தமிழிசை கூறினார்.