தொடரும் துப்பாக்கிச்சூடு: தப்பி ஓடிய ரவுடி… சுட்டுப்பிடித்த போலீஸ்!

சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி ரிச்சர்ட் சச்சின்
சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி ரிச்சர்ட் சச்சின்
Published on

திண்டுக்கல்லில் ரவுடி ஒருவர் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் நகர திமுக மாணவரணி நிர்வாகி பட்டறை சரவணன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் ஜாமீனில் வெளிவந்தனர்.

இதைத் தொடர்ந்து, சரவணன் கொலைக்கு பழிக்குப் பழியாக செப்டம்பர் 28ஆம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சரவணன் கொலை வழக்கில் இருந்த இரண்டாவது குற்றவாளியான இர்பானை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று இர்பான் கொலையில் தொடர்புடைய முத்தழகுப்பட்டியை சேர்ந்த எடிசன் சக்கரவர்த்தி, மார்ட்டின் நிதிஷ், ரிச்சர்டு சச்சின் மற்றும் மாரம்பாடியைச் சேர்ந்த பிரவீன் லாரன்ஸ் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இர்பான் கொலைக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய போலீஸார் ரிச்சர்டு சச்சினை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் திண்டுக்கல் அருகேயுள்ள மாலப்பட்டி சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டிய ரச்சர்டு சச்சின், அந்த சமயத்தில் அரிவாளை எடுத்து காவலர் அருண் பிரசாத்தை தாக்கியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தனது கை துப்பாக்கியால் ரிச்சர்டின் வலது காலில் சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அவரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரிவாளால் வெட்டப்பட்ட காவலர் அருணுக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 13 நாள்களில் 3 என்கவுண்டர் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இன்று மற்றொரு துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com