டி ஐ ஜி விஜயகுமார்
டி ஐ ஜி விஜயகுமார்

டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: இதுதான் காரணமா?

Published on

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் விஜயகுமார் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் இதற்கு முன்னர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருந்தார்.

காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய்ப்பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

எளிய பின்னணியைச் சேர்ந்த விஜயகுமார் தேனி மாவட்டத்தில் உள்ள அரண்மனை புதூர் கிராமத்தில் இருந்து வந்தவர். விஜயகுமாரின் தந்தை விஏஓவாக பணியாற்றியவர். இந்நிநிலையில் குரூப் 1 தேர்வு எழுதி 2003-ஆம் ஆண்டு டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார். ஆனாலும் தொடர்ந்து படிப்பில் ஆர்வம் செலுத்திய விஜயகுமார் கடந்த 2009-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ்ஸாக தேர்வானார்.

முன்னதாக காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார் விஜயகுமார். பின் சிபிசிஐடி எஸ்பியாக தனது பணியை தொடர்ந்தார். சிபிசிஐடியாக எஸ்.பியாக பணியாற்றிய போது டி.என்.பி.எஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பணிபுரிந்துள்ளார். இவர் அண்ணாநகர் துணை ஆணையராக இருந்த போது அரும்பாக்கத்தில் நடந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை 40 மணி நேரத்திற்குள் கைது செய்தார். இது காவல் துறை வட்டாரத்தில் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தார்

நேற்றிரவு ஒரு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் விஜயகுமார். கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. பணி சுமை காரணம் இல்லை என்றும் மன உளைச்சல் காரணமாகவே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.

அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours)

State suicide prevention helpline – 104 (24 hours

logo
Andhimazhai
www.andhimazhai.com