தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை தேசிய கல்விக்கொள்கையின் கீழ் வரக்கூடிய பிஎம்ஸ்ரீ பள்ளித்திட்டத்தில் இணைய மறுத்ததால் நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ரூ. 2,152 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். இதில் முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை மத்திய அரசு தரவில்லை.
இதேபோல், சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய வேண்டிய ரூ. 2000 கோடி நிதியையும் இன்னும் தரவில்லை. இதனால் தமிழக பள்ளிக் கல்வித்துறை கடுமையான நிதி சுமையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதே வேளையில் குறிக்கோள்களில் வெற்றி அடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது, இப்படித்தான் மத்திய பாஜக அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதா, முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பதிலளித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் ஒரு விஷயத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக இருப்பது அரசியல் சாசன உணர்வுக்கும் ஓர் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கும் எதிரானது. பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்குப் பின்னரே தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதில் இந்திய மக்களின் ஒட்டுமொத்த அறிவும் அடங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான உங்களின் திட்டமிட்ட எதிர்ப்பில் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்துவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடத் திட்டத்தையும், பாடப் புத்தகங்களையும் உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? ஒட்டுமொத்த வளர்ச்சியையும், பல்துறை அறிவையும், எதிர்கால தேவையை நிறைவேற்றக் கூடியதாகவும் அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறீர்களா?
அப்படி இல்லாவிட்டால், உங்களின் அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.