நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, மயிலாப்பூர் மாடவீதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ‘மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ எனும் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதன் தலைவராக தேவநாதன் யாதவ் உள்ளார்.
இந்த நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக தேவநாதன் மீது 140க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தாக கூறப்படுகிறது.
இந்த புகாரின்பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த தேவநாதனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் 525 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் நிதி நிறுவன பணத்தை தேவநாதன் தேர்தலுக்கு பயன்படுத்தினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் தேவநாதன், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.