மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் அவரின் மகன் உதயநிதிக்குத் துணைமுதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது, தெரிந்ததே!ஏற்றுக்கொண்ட புதிய பொறுப்புக்கு ஏற்ப துணைமுதலமைச்சர் உதயநிதி அதிகாரபூர்வமாக பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
வழக்கமாக, வடகிழக்குப் பருவமழைக் கால முன்னெச்சரிக்கைத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி மாநில கட்டுப்பாட்டு மையத்தில் சென்று பார்வையிடுவார். கடந்த வாரம் இதுகுறித்து அவர் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், துணைமுதலமைச்சர் இன்று மாநில பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு மையத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
”மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் அவசர அழைப்பு மையத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைக் கேட்டறிந்த அவர், புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், மழை அளவு சேகரிக்கப்படும் முறை, வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்படும் முறை, பேரிடர் காலத்தில் பல்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் கேட்டறிந்தார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “TN Alert” செயலியில் உள்ள வானிலை முன்னறிவிப்பு, பெறப்பட்ட மழை அளவு ஆகியன குறித்து ஆய்வு செய்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, இச்செயலியின் மூலம் பொதுமக்கள், வானிலை முன்னெச்சரிக்கை, மழைமானி வாரியான தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர் தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், பேரிடர் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள TN- SMART இணையதள வசதி குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், சென்னை நிகழ் நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு மற்றும் பொதுவான எச்சரிக்கை நடைமுறையின் செயல்பாட்டையும் கேட்டறிந்த உதயநிதி, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அனைவரும் விழிப்புடன் இருந்து, பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை வழங்கி, விரைவாக தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளை மேற்கொள்ள தேவையான அனைத்து வகையான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.