"சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட பாதிப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலையிலும் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மழை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் நேற்றிரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தநிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்கரை பகுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் ஏரிக்கு மழை நீர் வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம் குறித்து கேட்டறிந்தார். அதேபோல, திருவல்லிக்கேணி பகுதியிலும் உதயநிதி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
“நள்ளிரவு 12 மணி, 1 மணி வரைக்கும் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் போய் ஆய்வு செய்து இருக்கிறேன். நிறைய இடங்களில் தண்ணீர் வற்றியுள்ளது.
இன்னும் மழை வந்தாலும் அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். பள்ளிக்கரணை பகுதியில் போய் பார்த்து இருக்கிறேன். அங்குள்ள மக்கள் குறைகளைத் தெரிவித்து இருக்கிறார்கள். நாளை மீண்டும் ஆய்வுக்கு வருவதாக சொல்லியிருக்கிறேன். பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளை வர சொல்லியிருக்கிறேன். கடந்த ஆண்டு என்ன பிரச்சினைகள் இருந்ததோ.. அது இந்த ஆண்டு வராத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது." என்றார்.