தமிழ்நாட்டில் உள்ள 8 ஆயிரம் பயிற்சி மருத்துவர்களின் நிலையை அரசும் எம்.ஆர்.பி.யும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்-தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
இவ்விரண்டு அமைப்புகளும் இணைந்து திருச்சியில் கோரிக்கை மாநாட்டை நேற்றுமுன்தினம் நடத்தின.
டாக்டர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் த.அறம் தலைமைவகித்தார். மருத்துவ மாணவர் ஜெ.சி. தினேஷ் வரவேற்புரையாற்றினார்.
மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, முன்னாள் மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.முத்துக்குமார், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் எம். கீர்த்திவர்மன், டாக்டர் காமராஜ், மாநில இணைச் செயலாளர் டாக்டர் மு.கிருஷ்ணா, மருத்துவ மாணவர் எஸ்.கிஷோர் குமார் உட்பட பலரும் பேசினர்.
நூற்று இருபதுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
“ பதஞ்சலி நிறுவனர் பாபா ராம் தேவ் மக்களை, நவீன அறிவியல் மருத்துவத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும் வகையில் செயல்பட்டார்.அம் மருத்துவத் துறையினரை இழிவு படுத்தும் வகையிலும் கருத்துக்களை கூறிவந்தார்.கொரோனா காலத்தில் அறிவியல் ரீதியாக நிரூபணமாகாத 'கொரோனில்' என்ற மருந்தை ,கொரோனாவை தடுக்கும்,அதை குணப்படுத்தும் என உண்மைக்கு மாறான தவறான விளம்பரங்களை வெளியிட்டார். அம்மருந்தை பல கோடி ரூபாய்க்கு விற்று மோசடி செய்தார். எனவே, ஆயுர்வேதா என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் பாபா ராம் தேவ் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். வெறும் மன்னிப்பு விளம்பரங்களை வெளியிட்டால் மட்டும் போதாது. பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். உடல் நலக் கேடு பயக்கும் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்நிறுவனம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மருந்துப் பொருட்களை விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும். பாபா ராம் தேவிற்கு ஆதரவாக செயல்பட்டதற்கு மக்களிடம் ஒன்றிய அரசு மன்னிப்புக் கோர வேண்டும்.
# பிற்போக்குச் சக்திகளிடமிருந்து "நவீன அறிவியல் மருத்துவம் " என்ற மனிதகுலத்தின் " அறிவியல் மணி மகுடத்தை" காத்திட மருத்துவர்கள்,மருத்துவ மாணவர்கள் ,அறிவியலாளர்கள் முன்வர வேண்டும்.
# மிக்ஸோபதி(Mixopathy), ஒருங்கிணைந்த மருத்துவம்
(Integrated medicine), காமன் ஃபவுண்டேஷன் கோர்ஸ் ( Common Foundation Course ), பாரம்பரிய மருத்துவம் ( Traditional Medicine), வேதகால மருத்துவம் ( Vedic Medicine), ஆன்மீக மருத்துவம்
( Spiritual Medicine),
ஜோதிட மருத்துவம் ( Astrological Medicine) என்ற பெயரில் , நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
# மருத்துவத்தில் போலி அறிவியலை, மூடநம்பிக்கைகளை, அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை திணிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
# ஒன்றிய அரசு, ஆயுர்வேதா மற்றும் யோகாவை இந்துத்துவ மயமாக்குவதும், ஆயுர்வேதாவை இந்து மருத்துவ முறையாக மாற்ற முயல்வதும், "ஒரே தேசம் ஒரே மருத்துவ முறை " என்ற திட்டத்தை கொண்டுவர முயல்வதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.அது இந்தியாவின் மருத்துவ அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை,முன்னேற்றத்தை பாதிக்கும். மருத்துவ அறிவியலின் மதச்சார்பின்மையை பாதிக்கும்.எனவே, இத்தகைய முயற்சிகளை கைவிட வேண்டும்
# நெக்ஸ்ட் (NExT) தேர்வை,மருத்துவப் படிப்பில் திணிப்பை ஒன்றிய அரசு,நிரந்தரமாக
கைவிட வேண்டும்.
# நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நிரந்தர விலக்கு வழங்கிட வேண்டும்.
# எம்.பி.பி.எஸ் மாணவர் ஒவ்வொருவரும்,
சில குடும்பங்களை தத்தெடுக்க வேண்டும் என்ற " குடும்ப தத்தெடுப்பு திட்டத்தை ( Family Adoption Programme) கைவிட வேண்டும்.
# இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் ,முதுநிலை மருத்துவ மாணவர்களுக்
கான "மாவட்ட மருத்துவமனை கட்டாயப் பணியை ( District Residential Programme) " ரத்து செய்திட வேண்டும்.
# தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
# அரசு உதவி மருத்துவர் MRB தேர்வு
ஒவ்வொரு ஆண்டும் வைக்கப் படவில்லை.அந்த MRB தேர்வு 2018 க்கு பிறகு ஐந்தாண்டுகள் கழித்து 2023 ல்1021 பதவிக்கு தேர்வு வைக்கப் பட்டது அதற்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை வாய்ப்பு வேண்டி விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிட்டத் தக்கது.இந்நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 அரசு உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான இடங்களை நிரப்புவதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம், தேர்வை நடத்துவதற்கு 15.03.2024 அன்று அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டுக்குரியது.
ஆனால்,
இந்த அறிவிக்கையில் , இத்தேர்வை எழுதுவதற்கு , விண்ணப்பிப்பதற்கான ,இறுதி நாளாக 15 .05 .2024 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இதனால், தற்பொழுது தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவத்தை மேற்கொண்டு வரும் ,8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், இத்தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது .
அவர்கள் மே மாத இறுதியில் தான் தங்களது பயிற்சியை முடிக்கின்றனர்.அதன் பிறகே மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திட முடியும்.
மருத்துவர்கள் மத்தியில் வேலை இல்லாத் திண்டாட்டம், அதிகரித்துள்ள நிலையில் , இந்த பயிற்சி மருத்துவர்களும் நடைபெற உள்ள எம்.ஆர்.பி தேவை எழுதக் கூடிய வகையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை 30.06.2024 ஆக நீட்டிக்க வேண்டும் .
இதன் மூலம், மே மாதம் இறுதியில் பயிற்சி மருத்துவத்தை முடிக்கும் பயிற்சி மருத்துவர்கள், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்று, எம்.ஆர். பி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்கு சில வாரங்கள் தேவைப்படும்.
எனவே, தற்போது பயிற்சி மருத்துவத்தை மேற்கொண்டு வரும்,
8 ஆயிரம் பயிற்சி மருத்துவர்களின் நலனை கருத்தில் கொண்டு , இத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளை, 15.05.2024 லிலிருந்து , 30.06.2024 க்கு நீட்டிக்க வேண்டும்.
தேர்தல் காரணமாக MRB தேர்வை மே மாதம் நடத்த முடியாத சூழலும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே 8000 மருத்துவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு
இது குறித்து,தமிழ்நாடு அரசும், எம்.ஆர்.பி யும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .
# எம்.ஆர்.பி தேர்வை ஒரே தேர்வாக,ஒரே நாளில்,ஒரே நேரத்தில்,ஒரே வினாத்தாளுடன்( one session ,)நடத்த வேண்டும். தவணை முறையில் இரண்டு மூன்று முறை தேர்வு நடத்துவதை (multiple sessions) கைவிட வேண்டும். இதன் மூலம், சீராக்குதல் ( Normalisation) உள்ளிட்ட பல சிக்கல்களை தீர்க்க முடியும்.
ஒரே நேரத்தில் லட்சக் கணக்கானோர் தேர்வு எழுதும் வகையில், அறிவியல் தொழில்நுட்ப
வளர்ச்சியை பல ஆண்டுகளுக்கு முன்னரே நாம் எய்திவிட்டோம். இந்நிலையில் வெறும்
25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே பங்கு பெறும் ஒரு தேர்வை , பல கட்டமாக நடத்துவது என்பது பல்வேறு ஐயங்களையும் அவநம்பிக்கைகளையும் ஏற்படுத்துகிறது.எனவே எம்.ஆர்.பி தேர்வை ஒரே தேர்வாக ,ஒரே கட்டத்தில் மட்டுமே நடத்தவேண்டும்.
# எம்.ஆர்.பி தேர்வு முடிவுகளை வெளியிடும் பொழுது, பட்டியலில், தேர்ந்து எடுக்கப் பட்டவர்களின் பெயருடன் , அவர்களின் இட ஒதுக்கீடு வகுப்புப் பட்டியல் வெளியிடப்படுவதில்லை. இதனால் இட ஒதுக்கீடு தொடர்பான ஐயங்கள் எழுகின்றன .எனவே தேர்வானவர்கள் பெயருடன் அவர் சார்ந்துள்ள சமூகத்தை குறிப்பிட்டு ,பொது ரேங், கம்யூனிட்டி ரேங் (General Rank, Community Rank ) வுடன் பட்டியலை வெளியிட வேண்டும்.இதன் மூலம் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள முடியும்.
# தமிழ் வழியிலோ அல்லது தமிழை ஒரு மொழிப்பாடமாகவோ 10 ஆம் வகுப்புவரை படித்து,அத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அரசுப்பணிக்கான எம்.ஆர்.பி தேர்வில் நடத்தப்படும் தமிழ் தேர்வை எழுதுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
# எம்.ஆர்.பி தமிழ்த் தேர்வை, பட்டப்படிப்பு அளவிற்கு கடினமான ஒன்றாக நடத்துவது சரியல்ல. இதன் மூலம் பல திறமையான மருத்துவர்கள் அரசுப் பணிக்கு வர
முடியாத நிலை ஏற்படுகிறது.
# ஏற்கனவே முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, கட்டாயப் பணியில் உள்ள தனியார் மருத்துவர்களுக்கு,சிறப்பு எம்.ஆர்.பி தேர்வை நடத்தி ,பணிவரன்முறை செய்திட வேண்டும்.
# பயிற்சி மருத்துவர்கள்,பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் உயர்சிறப்பு மருத்துவர்களின் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும். அவர்களின் பணிச் சுமையை குறைத்திட வேண்டும்.எட்டு மணி நேரம் மட்டுமே வேலை வழங்கிட வேண்டும்.
# எம்.பி.பி.எஸ் தேர்வுகளில்
, சில நாட்கள் வருகைப் பதிவு குறைவாக உள்ள மாணவர்களை remedial classes வகுப்பு attend செய்ய வைத்து அடுத்த சில வாரங்களில் நடத்தப்படும் துணைத் தேர்வை
(Supplementary ) எழுத அனுமதிக்க வேண்டும்.
மேலும் ,வருகைப் பதிவு குறைவாக உள்ளவர்கள் மற்றும் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் 6 மாதத்தில் பருவத் தேர்வு (Semester Exam )வழக்கமாக எழுதி வந்த தேர்வு முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த 6 மாதத்தில் நடத்தப்படும் பருவத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்.இதன் மூலம் மாணவர்களுக்கு ஓராண்டு காலம்
விரயமாவதை தடுத்திட முடியும்.மாணவர்கள் 9 ஆண்டுகளில் இறுதிஆண்டு வரை படித்து முடிக்க வேண்டும் என்று புதிய விதி வந்துள்ள நிலையில், இது போன்ற மாணவர் விரோத நடவடிக்கைகள் கைவிடப் படவேண்டும்.
# தற்பொழுது மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள கண்
( Eye),மற்றும் காது மூக்கு தொண்டை
( ENT) படிப்பை இறுதி ஆண்டிற்கு மாற்றக் கூடாது. இது இறுதி ஆண்டுப் படிப்பை கூடுதல் சுமை உள்ளதாக மாற்றிவிடும்.
# பட்டியல் மற்றும் பட்டியல் பழங்குடியின மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிப்பதோடு, இந்த உதவித் தொகை மாணவர்களிடையே,
கல்லூரிகளிடையே ஓரே சீராக இல்லாமல் வெவ்வேறாக உள்ளன. பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இவை களையப்பட வேண்டும்.
# அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் படிக்கும் SC/ST/BC/ MBC மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்
படவில்லை. அவர்களுக்கும் உதவித் தொகை வழங்கிட வேண்டும்.
# மருத்துவர்களை ஒப்பந்தம், தற்காலிகம் மற்றும் அவுட் சோர்சிங் முறைகளில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.
# மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கக் கூடாது. ஓய்வு பெற்ற மருத்துவர்களை, மீண்டும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ,தற்காலிக அடிப்படையில் ,பணி நியமனம் செய்யக்கூடாது .இது இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பை பறித்து விடுகிறது.
# சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ,அனைத்து ஓய்வு பெற்ற மருத்துவர்களையும் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
# தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் , போக்குவரத்து வசதிகள்,மாணவர்களுக்கு போதிய நூலக வசதிகள் ,விளையாட்டுத் திடல் வசதிகள் இல்லை.கல்லூரி மாணவர் பேரவை ( Students' Council) போன்றவை இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு கலை, இலக்கிய விழாக்கள் நடத்தப்படவில்லை .
எனவே, இந்த புதிய 11 அரசு மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களின் கோரிக்கைகளை, அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.” என்று தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.