தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்துவதைப் பற்றி கருத்துக்கூறிய அமைச்சர் உதயநிதி, “ஐடி ரெய்டு டெய்லி வீட்டுக்கு வருகின்ற விருந்தாளி மாதிரி” என்று கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதைக் கூறினார்.
தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான் போட்டி என்று அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த உதயநிதி, ”இதை நீங்கள் அ.தி.மு.க தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். திமுகவுடன் போட்டிபோடுவது யார் என்பதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது மிகப்பெரிய போட்டியாக நடக்கிறது" என்று அவர் கூறினார்.
தமிழகத்தில்தான் சாதியப் பாகுபாடுகள் அதிகமாக இருப்பதாக நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் பேசியது பற்றிய கேள்விக்கு, “ஆளுநர் மற்ற மாநிலங்களுக்குப் போய் பார்க்கிறாரா என்று தெரியவில்லை. நம் மாநிலத்தில் சாதியப் பாகுபாடுகள் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆளுநர் தேவையில்லாத அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அவர் சொல்வதை ஏற்கமாட்டார்கள்.” என்றார்.
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவது தொடர்பாகக் கேட்கப்பட்டதற்கு, ” வருமான வரித் துறை சோதனை என்பது தேர்தல் நேரத்தில் நடக்கக்கூடிய ஒன்றுதான். டெய்லி வீட்டுக்கு வர்ற விருந்தாளி மாதிரி ஆகிவிட்டார்கள்.” என்று உதயநிதி குறிப்பிட்டார்.
சனாதன விவகாரம் குறித்து மோடி என ஒருவர் கேட்கத் தொடங்கியபோதே கூச்சல் ஏற்பட்டது. அதற்கு, இன்னுமா அதைப் பற்றி பேசுகிறீர்கள் என்ற அவர், “ இது திசைதிருப்பும் முயற்சி. சி.ஏ.ஜி. அறிக்கை, மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசுவோம்." என்றும் கூறினார்.