ஜனவரியில் சி.பி.எம். மாநில மாநாடு - அடுத்த மாநிலச்செயலாளர் யார்?

சிபிஐஎம்
சிபிஐஎம்
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 3, 4, 5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இடதுசாரி கட்சிகளில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை சீரான இடைவெளியில் கட்சிகளின் மாநாடுகள் நடத்தப்பட்டு, மாநிலச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இதில், சிபிஎம் எனப்படும் இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநில மாநாடு, கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 30- ஏப்ரல் 1வரை மதுரையில் நடைபெற்றது. அதில், கே. பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாக மாநிலச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். 

வழக்கறிஞரான ஜி.இராமகிருஷ்ணனுக்குப் பிறகு விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பதவியில் இடம்பெற்றார். 

அவரைத் தொடர்ந்து யார் அந்தப் பதவிக்கு வருவார்கள் என்பது பரவலான கேள்வியாக உள்ளது. 

மூத்த தலைவர்கள்படி பார்த்தால் டி.கே.ரங்கராஜன், அ. சவுந்தரராசன் போன்றவர்கள் வரக்கூடும். 

வயது மூப்பு காரணத்தால் அவர்கள் போட்டிக்கே வராவிட்டால், மாநில செயற்குழு பட்டியல் வரிசைப்படி கட்சியின் மையக் குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம் போன்றவர்கள் இருக்கின்றனர். 

பிரபல முகமான எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு மக்களவை உறுப்பினர் பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டதைப் போல, அடுத்த தலைவர்கள் முன்னிறுத்தப்படுவார்கள் என்றால், ஊடகங்களில் சிபிஎம் கட்சியின் முகமான கனகராஜ் போன்றவர்களுக்கும் வாய்ப்பு உண்டு. 

ஊகங்களைத் தாண்டி இடதுசாரி அமைப்புகளுக்கே உரிய நடைமுறைப்படிதான் புதிய மாநிலச் செயலாளர்தேர்வு செய்யப்படுவார் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை. 

இந்த மாநாட்டை அடுத்து 2026ஆம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதுவும் இதில் எதிரொலிக்கலாம். 

மாநாடு குறித்து கே. பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை: 

”இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மத்தியக்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சியின் கிளை மாநாடுகள் துவங்கி இடைக்கமிட்டி மாநாடுகள், மாவட்டக்குழு மாநாடுகள், மாநில மாநாடுகள் அதனைத் தொடர்ந்து அகில இந்திய மாநாட்டை நடத்துவது என கட்சியின் மத்தியக்குழு முடிவு செய்திருந்தது.

அதன் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் 24வது தமிழ்நாடு மாநில மாநாடு 2025 ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலிமிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். மாநாட்டின் முதல் நாளான ஜனவரி 3 ஆம் தேதி அன்று மாலை விழுப்புரத்தில் பிரம்மாண்டமான செம்படை பேரணியும், அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறும்.

2025 ஜனவரி 4, 5 தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் மாநிலச் செயலாளர் வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் செய்யப்பட்ட கட்சியின் தலையீடுகள், நடத்தியுள்ள போராட்டங்கள், அரசியல் நிலைபாடுகள், ஜனநாயகப்பூர்வமாக விவாதிக்கப்பட்டு எதிர்வரும் காலத்திற்கான கடமைகள் வரையறுக்கப்பட உள்ளது.” என்று  கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com