தஞ்சாவூர் சிறுமி சென்னையில் கொலை- வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி விசாரிக்க சி.பி.எம். கோரிக்கை!

(மாதிரிப் படம்)
சிறுமி மீது வன்கொடுமை
Published on

வீட்டு வேலைக்காக அழைத்துவரப்பட்ட சிறுமி சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைக்கு தமிழக அரசே உத்தரவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

அக்கட்சியின் மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செல்வா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

”சென்னை, அமைந்தகரை மேத்தா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  வீட்டு வேலை பணிகளுக்காக அழைத்துவரப்பட்ட 16 வயது சிறுமி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது  நண்பர்களால் சித்தரவதை செய்யப்பட்டு   அக்டோபர் 31ஆம் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் .இக் கொடூரசெயலுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது . சிறுமி கொலைக்கு காரணமான ஆறு பேரை நவம்பர் 2 ஆம்  தேதி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் நாட்டிலேயே தமிழகம்தான் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என சொல்லப்பட்டு வருகின்ற நிலையில்  சென்னை மாநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தை தொழிலாளர் பணியில் ஈடுபடுத்தி கொல்லப்பட்ட கொடூர  அவலம் வெளியாகியுள்ளது   .

தஞ்சாவூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தின்  பட்டியலின சமூகத்தை சார்ந்த  (எஸ்சி) சிறுமியை சட்டத்திற்கு  விரோதமான வகையில் வீட்டு வேலை உட்பட்ட பணிகளில் அக்குடும்பத்தினர் ஈடுபடுத்தி உள்ளனர்.           

போக்சோ சட்டம் மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி குழந்தையின் மரணம் உரிய முறையில் காவல்துறையால் கையாளப்படவில்லை எனத் தெரிகிறது.

இறந்த சிறுமியின் படம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,  சொந்த ஊரில் உறவினருக்கு முன்னிலையில் இறுதிச் சடங்குகள் நடத்தாமல் காவல்துறையினர் முன்னிலையில் சிறுமியின் உடலை சென்னையிலேயே  எரித்துள்ளதாக தெரிகிறது.

சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உருவாவதால் வன்கொடுமை சட்டத்தின் படி உரிய விசாரணை அதிகாரி நியமித்து விசாரணையை அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடும் அரசு வேலையும், குடியிருக்க வீடும்  ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சமூக நல திட்டங்களில் முன்னேறி உள்ள  தமிழகத்தில்  வயிற்றுப் பிழைப்புக்காக சிறுமியை வீட்டு வேலைப் பணிகளில் ஈடுபடக்கூடிய அவலம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. எனவே இப்பிரச்சினையை ஒரு தனிப்பட்ட சம்பவமாகக் கருதாமல் உரிய வகையில் விரிவான ஆய்விற்கும் விசாரணைக்கு உட்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.” என்று ஜி.செல்வா கேட்டுக்கொண்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com