’யானைகள் வழித்தடம் - விரிவாகக் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துங்க!’

யானைகள் வழித்தடம்
யானைகள் வழித்தடம்
Published on

யானைகள் வழித்தடம் தொடர்பாக கருத்துக்கேட்பு நாள்களை அதிகரிக்கவும் அனைத்துத் தரப்பு மக்களிடம் விரிவான கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தவும் சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழ்நாடு வனத்துறை கடந்த ஏப்ரல் 29 அன்று யானைகள் வழித்தடம் தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் 42 இடங்களில் யானைகள் வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யானைகள் வழித்தடம் தொடர்பான அறிக்கையினை வெளியிட்டவனத்துறை போதுமான கால அவகாசம் வழங்காமல் ஒரு வார காலத்திற்குள் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கோரியிருப்பது எந்த வகையிலும் பொறுத்தமானதல்ல என சுட்டிக்காட்டுவதோடு, குறைந்தபட்சம் அறுபது நாட்களுக்கு கருத்துக்கேட்புக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் யானைகள் வழித்தடம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள், அரசியல் கட்சிகள், சூழலியல் அமைப்புகள் உட்பட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களை அறியும் வகையில் விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்திட வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் முன்வரவேண்டும்.

எனவே, தமிழக அரசும் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு மக்களிடையே எழுந்துள்ள அச்சத்தை போக்கவும், யானைகள் வழித்தடம் தொடர்பான பிரச்சனையில் வன உரிமை அங்கீகார சட்டம் 2006 அளித்துள்ள உரிமைகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com