அமைச்சர் இப்படிப் பேசலாமா?- மதுரை மழை... பாலகிருஷ்ணன் மனத் தாங்கல்!

madurai flood
மதுரை வெள்ளம்
Published on

மதுரையில் ஏற்பட்ட வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நிதியை வழங்கவேண்டும் என்று இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமீபத்தில் பெய்த கனமழையால் மதுரை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, செல்லூர், கட்டபொம்மன் நகர், முல்லை நகர், காந்தி நகர், ஆத்திகுளம், சங்கர் லைன், சத்தியமூர்த்தி நகர் 1ஆவ,து இரண்டாவது குறுக்கு தெருக்கள், செல்லூர் 50 அடி ரோடு, அகிம்சாபுரம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் வீடுகளை விட்டு காலி செய்து  சிறுபகுதியினர் முகாமிற்கும், பெரும்பகுதியினர் உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கும் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது. வெள்ள நீர் வடிந்த பிறகும் கூட, வெள்ளத்தால் ஏற்பட்ட கழிவுகளால் மக்கள் வீடுகளுக்குள் சென்று வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு வெளியில் தங்கியிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.” என்று பாதிப்புகளைப் பட்டியலிட்டுள்ளார். 

”வெள்ளச் சேதம் ஏற்பட்டவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை ஏற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்  மற்றும் அதிகாரிகள் உடனடியாக விரைந்து வெள்ள நீர் வடிவதற்கும், மக்கள் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்” எனப் பாராட்டியுள்ள அவர்,

”இதேபோன்று, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் நூற்றுக்கணக்கானோர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டும், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியும் இரவு பகல் பாராமல் பணியாற்றியுள்ளார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார். 

”பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிட தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதும், அதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதும் வழக்கமான ஒன்றாகும். இந்த அடிப்படையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுத்து தலா ரூபாய் 25,000 நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசும், மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் இதனை பரிசீலித்து நிவாரண உதவிகளை அறிவிப்பார்கள் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் மாண்புமிகு பத்திரப்பதிவு துறை அமைச்சர் திரு பி.மூர்த்தி அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது ‘எங்கே பாதிப்பு உள்ளது, பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடமே கேளுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிகளை எதிர்ப்பார்த்துக் கொண்டுள்ள நிலையில் தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை குறித்து தெரிவித்துள்ளது பொருத்தமற்றதாகும். இயற்கை இடர்பாடுகளால் மக்கள் தவித்துக் கொண்டுள்ள நிலையில் அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், நல்லெண்ணம் கொண்டோர் அனைவரும் ஒருங்கிணைந்து மக்களை காப்பாற்றுவதே இன்றைய அவசர தேவையாகும்.

இக்காலத்தில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிவாரண உதவிகளை அளித்து வந்துள்ள நிலையில், மதுரையில் பாதிக்கப்பட்ட மக்கள் முதல்வரின் அறிவிப்பை எதிர்ப்பார்த்துக் கொண்டுள்ள நிலையில் அமைச்சர் அவர்களின் கருத்து தங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காதோ என்று மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது என்பதை கவனப்படுத்த விரும்புகிறோம்.

எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் மதுரையில் ஏற்பட்ட வெள்ள சேதம், மக்களின் பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி மக்களது வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் நிவாரண தொகையை வழங்கிட தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com