சென்னை பிராட்வே பேருந்துநிலையம் - வெளிப்படையா நடந்துக்கங்க!- சொல்கிறார் சி.பி.எம். மா.செ.!

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து கோப்பகப் படம்
Published on

பிராட்வே பேருந்து நிலையம் உட்பட்ட மாநகரப் போக்குவரத்து கழகத்தின் இடங்களில் மேற்கொள்ள போகும் திட்டங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் அமைப்புகளின் ஆலோசனைகளை பெற்று திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் மைய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செல்வா வெளியிட்டுள்ள அறிக்கை:

” சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வருகின்ற பழமை வாய்ந்த பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்தை இடித்து, ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்தை, பன்னடுக்கு வணிக வளாகத்தை தமிழக அரசு உருவாக்கப் போவதாக தெரிய வருகிறது. இதற்கு ஏற்ப பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்றப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. 

பிராட்வே பேருந்து நிலையம் மட்டுமின்றி, மாநகரப் போக்குவரத்து கழகத்தின் தலைமை இடமான அதிக பரப்பளவு கொண்ட பல்லவன் இல்லம் உள்ளிட்டு சென்னை மாநகரின் பல்வேறு அரசு பேருந்து நிலையங்களின் இடத்தை தனியார் உதவியோடு வணிக வளாகங்களாக ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது சார்ந்து கொள்கை அறிவிப்பு கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது வெளியிடப்பட்டாலும், திட்டத்தின் தன்மை குறித்தும், அதன் மூலம் ஏற்படப் போகும் பயன்பாடுகள், விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு எவ்விதமான விவரங்களும் அரசு தரப்பில் இருந்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 

அரசு வருமானம் ஈட்டுவதற்காக  MTC/SETC  இன் சொத்துக்களை பணமயமாக்குதல் என்ற நோக்கத்தில்  அரசு சொத்துக்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை முடக்குவதோடு, மக்களுக்கு இதுவரை கிடைத்து வரும் அரசின் பொது போக்குவரத்து சேவையும் பாதிப்புக்கு உள்ளாகும் 

பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்து பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகம் உருவாக்கும் திட்டத்தின் தன்மை குறித்து 2024 ஜனவரி மாத தொடக்கத்தில் பேருந்து நிலையத்தில் கடைகளில், நடைபாதைகளில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள்  மாநகராட்சி மண்டல-5 அலுவலக  அதிகாரிகளை சந்தித்து கேட்டபோது, அப்படி ஒரு திட்டமே அரசிடம் இல்லை என தெரிவித்து விட்டனர்.

ஆனால், தேர்தல் முடிந்தவுடன் ஏப்ரல் 26 -ம் தேதி மேற்கண்ட  மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து, பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகம் வரப்போவதாகவும், கடைகளுக்கான மாற்று இடங்கள் குறித்து ஆலோசனை சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். இது எதுவும் எழுத்துப்பூர்வமாக நடைபெறவில்லை. மேலும் திட்டத்தின் தன்மை குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.

எனவே, பிராட்வே பேருந்து நிலையம் உட்பட்ட சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இடங்களில் மேற்கொள்ள போகும் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் வெளிப்படையாக அறிவிப்பதோடு, திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கையை (Feasibility Report) அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் அமைப்புகளுடன் பகிர்ந்து, ஆலோசனைகளை உள்வாங்கி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.” என்று செல்வாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com