மாணவிக்கு பாலியல் தொல்லை- குற்றவாளிக்கு காவல்துறை பாதுகாப்பா? முத்தரசன் கோபம்!

sexual harassment
பாலியல் தொல்லை
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரைக் கடத்தமுயன்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்கிறது என கண்டனம் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டம் சாரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த பெண் பாலக்கோடு, அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சுபாஸ் என்பவர் இந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி அவர் 15 பேருடன் கும்பலாகச் சென்று, மாணவியை மிரட்டி கடத்திச்செல்ல முயன்றுள்ளனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தளி காவல்நிலையத்தில் 16ஆம் தேதி புகார் அளித்துள்ளனர்.

இந்த விவரங்களை அறிக்கை ஒன்றில் விவரித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “புகார் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வதற்கு மாறாக, குற்றவாளிகளை பாதுகாப்பது மட்டுமின்றி, புகார் கொடுத்தவர்களை மிரட்டி, வழக்கை திரும்பப்பெற வேண்டுமென்று வற்புறுத்துகிறது. அப்படி திரும்பப் பெறாவிட்டால் மாணவியின் புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவோம் என அச்சுறுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.” என்று கூறியுள்ளார். 

”தமிழ்நாடு அரசு, குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் சமூக விரோத சக்திகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் முதலமைச்சரின் நிலைப்பாட்டிற்கு எதிராக, தளி காவல் துறை செயல்படுவது வியப்பை அளிக்கிறது. மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.” என தமிழ்நாட்டு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்றும் முத்தரசன் கூறியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com