மழைநீர் வடிகால் அமைத்ததில் ரூ. 536 கோடி ஊழல் நடத்திருப்பதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு இருக்கின்றனர்.
அறப்போா் இயக்கத்தைச் சோ்ந்த ஜெயராம் வெங்கடேசன் என்பவா் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் பல கட்டங்களாக புகாா் அளித்திருந்தாா். அதில், 2018ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் பெருநகர வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விடுபட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்க ரூ.290 கோடிக்கும்,நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டத்தின் சேதமடைந்த சாலைகள், நடைமேடைகள் புனரமைத்தல், பாலங்களை பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.246.39 கோடிக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள், தமிழ்நாடு அரசின் ஒப்பந்த விதிமுறைகளை மீறியும் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அப்போது தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி, அரசின் ஒப்பந்த விதிமுறைகளை மீறி தனக்கு வேண்டியவா்களுக்கு பணிகளை வழங்கினாா். இப்பணியும் தரமானதாக நடைபெறவில்லை. அதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாா் தொடா்பாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விரிவான விசாரணை நடத்தினா். இதனடிப்படையில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அரசுக்கு பல்வேறு வகைகளில் ரூ.26.62 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து எஸ்.பி வேலுமணி, சென்னை மாநகராட்சி செயற்பொறியாளா் ஏ.எஸ்.முருகன், ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளா் கே.சின்னசாமி, மேலும் செயற்பொறியாளா்கள் பி.ஆா்.சரவண மூா்த்தி, வி.பெரியசாமி, வி.சின்னதுரை, ஏ.நாச்சன், மண்டல அதிகாரி டி.சுகுமாா், கண்காணிப்பு பொறியாளா் கே.விஜயகுமாா், தலைமை பொறியாளா் எல்.நந்தகுமாா், ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளா் எம்.புகழேந்தி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆகிய 11 போ் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்குத் தொடா்பாக எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரிடம் ஊழல் தடுப்புப் பிரிவினா் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனா். ஏற்கெனவே வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கும், எல்இடி தெருவிளக்கு முறைகேடு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.