பெரியாறு அணையில் ஆய்வு... அப்போ உச்சநீதிமன்றத் தீர்ப்பு?!

mullai periyaru dam
முல்லைப் பெரியாறு அணை
Published on

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்வதற்கு வரம்பைமீறி கண்காணிப்புக் குழு அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழு கூட்டம் புதுதில்லியில் நேற்று நடைபெற்றது. அதில், அணை பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

கண்காணிப்புக் குழு அடுத்த 2 மாதங்களில் மீண்டும் கூடி வல்லுநர் குழு உறுப்பினர்களை முடிவு செய்யும் என்றும், அடுத்த ஓராண்டுக்குள் ஆய்வை முடித்து குழு தன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழு ஆணையிட்டுள்ளது.

மீண்டும் ஆய்வு!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2021ஆம் ஆண்டின் அணைப் பாதுகாப்பு சட்டத்தின்படி, பெரிய அணைகளின் பாதுகாப்பு குறித்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதால், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என்று கேரள அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதை ஏற்றுக் கொண்ட கண்காணிப்புக் குழு, முல்லைப் பெரியாறு அணையில், கடைசியாக 2011ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால், இப்போது மீண்டும் பாதுகாப்பு ஆய்வு நடத்த ஆணையிடுவதாகத் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டுகொள்ளவில்லை!

இதைப் பற்றி விவரித்துள்ள பா.ம.க. தலைவர் இராமதாசு, அணை பாதுகாப்பு சட்டத்தின் கூறுகளையும், முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு ஆய்வு நடத்தப் பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதையும் கருத்தில் கொண்ட கண்காணிப்புக் குழு, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

கண்காணிப்புக் குழுவின் வேலை என்ன?

”முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த வழக்கில் கடந்த 2006ஆம் ஆண்டிலும், அதன்பின் 2014ஆம் ஆண்டிலும் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை வலுப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் ஆணையிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பு செயல்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதுதான் கண்காணிப்புக் குழுவின் பணியாகும். ஆனால், அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.” என்றும் அதில் அவர் சாடியுள்ளார்.

பேபி அணையை முதலில் வலுப்படுத்தணும்!

”முல்லைப் பெரியாறு அணையின் அங்கமான பேபி அணையை வலுப்படுத்த பல ஆண்டுகளாக தமிழக அரசு முயன்று வருகிறது. ஆனால், அதற்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. பேபி அணையை வலுப்படுத்த அங்குள்ள 15 மரங்கள் வெட்டப்பட வேண்டும். அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கும்படி கேரள அரசுக்கு கண்காணிப்புக் குழு ஆணையிட்டும்கூட கேரளம் அதை மதிக்கவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ள இராமதாசு, ஆனால், கேரள அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று அணையில் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள குழு ஆணையிடுகிறது என்றால், கண்காணிப்புக் குழு சந்தேகத்துக்கு உரியதாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

முதல்ல 15 மரங்களை வெட்டணும்!

”முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருந்தாலும், அது முடிவடைய இரு ஆண்டுகள் ஆகலாம். அதுவரை பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது. மாறாக, பேபி அணையை வலுப்படுத்த தடையாக இருக்கும் 15 மரங்களை வெட்ட அனுமதிக்கப்பட்டால், ஓராண்டிற்குள் அணையை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு முடித்துவிடும். அதன்பிறகு பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், அணை வலிமையாக உள்ளதா? அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாமா என்ற இரு வினாக்களுக்கும் விடை கிடைத்து விடும். அதன் மூலம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அனைத்து சிக்கல்களும் நிரந்தரமாக தீர்ந்து விடும்.” என்றும் இராமதாசு யோசனை கூறியுள்ளார்.

புதுத் தீர்ப்பு வாங்கணும்!

உச்சநீதிமன்றத்தை அணுகி, கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும். மரங்களை வெட்டி, பேபி அணையை வலுப்படுத்திய பிறகு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளலாம் எனும் தீர்ப்பைப் பெற வேண்டும் என்றும் தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com