ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளதாதும், கூட்டாட்சியியலைச் சிதைப்பதும் ஆகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தன் சமூக ஊடகப் பக்கங்களில் இவ்வாறு கூறியுள்ள அவர், “வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சினைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாதது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
”எதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை உருவாக்கும்.
இந்த முன்மொழிவு என்பதே மொத்தத்தில் பா.ஜ.க.வின் ஆணவத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நகர்வுதானே ஒழிய, இதனை ஒருபோதும் அவர்களால் நடைமுறைப்படுத்த இயலாது. இந்திய ஜனநாயகம் ஒற்றைக் கட்சியின் பேராசைக்கு ஏதுவாக வளைக்கப்படலாகாது.” என்றும் அவர் கருத்துதெரிவித்துள்ளார்.
”ஒன்றிய அரசானது இத்தகைய திசைதிருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.