தமிழகம் தந்தது ரூ.5.16 லட்சம் கோடி; கிடைத்ததோ ரூ.2.08 லட்சம் கோடிதான்!

- முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்திய அரசுக்கு தமிழகம் கொடுத்த வரி 5.16 இலட்சம் கோடி ரூபாய்; ஆனால், நமக்கு திரும்பக் கிடைத்ததோ வெறும் 2.08 இலட்சம் கோடி ரூபாய்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'இந்தியாவுக்காகப் பேசுவோம்' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய பாட்காஸ்ட் உரைத் தொடரை வெளியிட்டார்.

அவருடைய பேச்சிலிருந்து...

“ காலம் காலமாக, இந்திய மக்கள் அனைவரும் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைக்க பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது.

2014ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாரதீய ஜனதா கட்சி - தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த மக்கள் நல வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

* வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம்.

* ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு.

* உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம்.

* சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.

* இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும்.

பத்து ஆண்டு ஆகப் போகிறது. ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ‘குஜராத் மாடல்’ என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல் – இப்போது என்ன ‘மாடல்’ என்றே தெரியாமல் முடியப் போகிறது!

திராவிட மாடல் என்னென்ன சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்திருக்கிறார்கள் என்று நாம் புள்ளிவிவரத்தோடு அடுக்கிய பிறகு, அவர்கள் பெருமையாகப் பேசிவந்த ‘குஜராத் மாடல்’ பற்றி, இப்போது மறந்தும் கூட பேசுவதில்லை.

இது ஒரு பக்கம் என்றால் - இன்னொரு பக்கம், நன்றாக இருந்த இந்தியாவின் பொதுத்துறை கட்டமைப்பையும் சீரழித்து, சின்னாபின்னம் ஆக்கிவிட்டார்கள். தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு மட்டுமே அதை மடைமாற்றிவருகிறார்கள். ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது - சிலரின் நலனாக சுருங்கிவிட்டது.

அரசுக்குச் சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனம், இப்போது தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது.

இந்தியா முழுவதும் இருக்கும் விமான நிலையங்களும், துறைமுகங்களும் தனியார் கைக்குப் போகிறது.

பிரதமர் மோடி சொன்னதுபோல், உழவர்களின் வருமானமும் இரண்டு மடங்கு ஆகவில்லை; ஏழை பாழைகளின் வாழ்க்கைத்தரமும் உயரவில்லை. இதை எல்லாம் மறைப்பதற்காகத்தான் மதவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி, அதில் குளிர் காயப் பார்க்கிறார்கள்.

பா.ஜ.க. ஆட்சியில், மாநிலங்களை அழிக்கின்ற படுபாதகமான பல மோசடிகள் செய்யப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் நிதி உரிமையை முழுவதுமாக பறித்துவிட்டது ஜி.எஸ்.டி. இதனால், தமிழ்நாட்டிற்கு நிதி சுயாட்சி உரிமை பறிபோனதுதான் மிச்சம்.

ஒன்றிய அரசுக்கு வரியாக, தமிழ்நாடு ஏராளமான நிதியை ஆண்டுதோறும் தருகிறது. அதே நேரத்தில், தமிழ்நாடு ஒன்றிய அரசிற்கு வரி வருவாயாக செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் ஈடாக, 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது.

2014 முதல் கடந்த ஆண்டுவரை நம் மாநிலம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 5 இலட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், வரிப் பகிர்வாக, நமக்குத் திரும்ப கிடைத்தது என்னவோ, வெறும் 2 இலட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்தான்.

பா.ஜ.க. ஆளும் ஒரு மாநிலம் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய்தான் வரியாகக் கொடுத்திருக்கிறது. ஆனால் வரிப் பகிர்வாக, 9 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. இதைத்தான் ஓரவஞ்சனை என்று சொல்கிறோம்.

இவ்வாறு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. ஒன்றிய நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து பெரும் நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது.

12ஆவது நிதிக்குழுவில் 5.305 விழுக்காடாக இருந்த நிதி ஒதுக்கீடு, 15ஆவது நிதிக் குழுவில் 4.079 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இழக்கின்ற நிதி கொஞ்சம் நஞ்சமல்ல. நமக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய 72,311 கோடி ரூபாயை நாம் இழந்திருக்கிறோம். பல திட்டங்களுக்கான பெரும் பங்கு மாநில அரசால்தான் வழங்கப்படுகிறது.

ஆனால் அதற்கான பெயர் மட்டும் ஒன்றிய அரசுக்கு வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு முத்திரைத் திட்டங்கள் என்று ஒன்று கூட இந்த 9 வருடங்களில் தரவில்லை. மாநிலங்களைப் பழிவாங்குகிற அரசாக இப்போதைய ஒன்றிய பா.ஜ.க. அரசு இருக்கிறது. மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிற மாநில அரசுகளை சிதைப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். இது மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

பா.ஜ.க.வின் வகுப்புவாத - வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரும் ஹரியாணாவும் பலியானதைப்போல மொத்த இந்தியாவும் பலியாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்.

பன்முகத்தன்மை கொண்ட பண்பட்ட இந்தியாவைச் செதுக்குவோம்! இந்தியாவைக் காப்போம். அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம்! இனி இது மு.க.ஸ்டாலின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலாக அமையும். எனது குரலை இந்தியாவின் குரலாக எல்லோரிடத்திலும் எடுத்துச் செல்லுங்கள்!” என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com